இனவாதம், மதவாதம் என்பனவே அரசாங்கத்தின் ஆயுதம்! – நத்தார் காலத்தில் தேர்தல், கிறிஸ்தவர்களை அவமதிக்கும் செயல்!- ரணில்

452
mahinda-vs-ranil

president-mahinda-ranil-gangaramayaகடந்த 10 வருடங்களில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்காத சாதனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கின்றனர்.

இவ்வாறான நிலைமை முன்னெப்போதும் இடம்பெறவில்லை என்று ரணில் குறிப்பிட்டார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவியில் இருந்து காலத்தில் புதிய தொழில்வாய்ப்புக்கள் எதுவுமே தொடங்கப்படவில்லை.

புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை. புதிய வர்த்தக வலயங்கள் திறக்கப்படவில்லை என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.

இனவாதம், மதவாதம் என்பனவே அரசாங்கத்தின் ஆயுதம்! ரணில் விக்கிரமசிங்க

அரசாங்கம் தனது தோல்வியை தவிர்த்துக் கொள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் ஒன்று கூடல் வைபவமொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தல் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஆரம்பமாகி விட்டது.

எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தடுக்கவும், அரசாங்கத்தின் தோல்வியைத் தடுத்துக் கொள்ளவும் இனவாதம், மதவாதம் என்பவற்றை அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்தியாக சித்தரிக்க முயன்று வருகின்றது. எனினும் இது போன்ற பிரச்சாரங்களால் எமது கட்சியின் வெற்றியை அரசாங்கத்தினால் இனி தடுத்து நிறுத்த முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நத்தார் காலத்தில் தேர்தல், கிறிஸ்தவர்களை அவமதிக்கும் செயல்! ரணில் விக்கிரமசிங்க

எதிர்வரும் நத்தார் காலத்தின் போது ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் முடிவு கிறிஸ்தவர்களை அவமதிக்கும் செயல் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதக் கடைசியில் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான நத்தார் கொண்டாடப்படவுள்ளது. எனினும் டிசம்பர் மாதம் முழுவதும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரப் பணிகள் நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக கிறிஸ்தவர்களின் நத்தார் கொண்டாட்டங்களை அரசாங்கம் அவமதித்துள்ளது . கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி எந்தவொரு சிறுபான்மை இனத்துக்கும் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு, மரியாதை எதுவுமே கிடையாது என்றும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

 

SHARE