உங்கள் வெற்றியை உறுதிசெய்யுங்கள்! இனிவரும் வாழ்வாதார உதவிகளுக்கான உந்துசக்தி அதுவே!! -வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் முல்லை. வடமாகாணசபை உறுப்பினர்கள் கருத்து.

437
வழங்கப்படும் வாய்ப்புகளை பயனுறுதியாக்கி மெல்ல மெல்ல நீங்கள் மீண்டு வர வேண்டும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறவேண்டும். அவ்வெற்றியே இனிவரும் எமது வாழ்வாதார உதவிகளுக்கான உந்துசக்தி! என முல்லை மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் பயனாளிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
26 குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் வீதமான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலேயே மேற்படி கருத்துக்களை வடமாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன் மற்றும் மேரிகமலா குணசீலன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில், 2014ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், கனகசுந்தரசுவாமி மற்றும் மேரிகமலா குணசீலன் ஆகியோரது ஒதுக்கீட்டிலான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை வைத்தியசாலையில் கால்நடை வைத்திய அதிகாரி திரு. சி. தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பயனாளிகள், கால்நடை வளர்ப்போர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
கணவரை இழந்த குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், வறுமையில் வாடும் குடும்பங்கள் என 26 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 25000 ரூபா பெறுமதியான கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழி வளர்ப்பிற்கான ஏனைய பொருள் உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன.
வடமாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன் மற்றும் மேரிகமலா குணசீலன், வடமாகாணசபை உறுப்பினர் வீ.கனகசுந்தரசுவாமி அவர்களின் பிரதிநிதி மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்க பிரதிநிதி ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய கால்நடை வைத்திய அதிகாரி திரு. சி .தயாபரன், உதவிகள் வழங்கப்பட்ட 26 குடும்பங்களின் வீடுகளுக்கும் இரு வார இடைவெளியில் கோழி வளர்ப்பு தொடர்பிலான முதல் கட்ட அவதானிப்பும் நடாத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர்கள் தமது உரையில்
பயனாளிகளுக்கான கருத்துக்களாக, கொடுக்கப்படும் வாய்ப்புகளை பயனுறுதியாக்கி மெல்ல மெல்ல எமது சமுகம் மீண்டு வருவதை நீங்களும் உறுதிசெய்ய வேண்டும். இன்று வழங்கப்பட்ட இந்த 26 குடும்பங்களின் வாழ்வாதார வெற்றி தான் இனி வரும் காலங்களில் இன்னும் பலருக்கு வாழ்வாதார உதவித்திட்டங்களை வழங்கி அவர்களையும் மேம்படுத்துவதற்கான உந்துசக்தியாக அமையும். உங்கள் முயற்சிகளுக்கு துணையாக கால்நடை வளர்ப்போர் சங்கம் கால்நடை வைத்திய வைத்தியர் அலுவலகம் மற்றும் மக்களின் பிரதிநிதிகளாக நாமும் உள்ளோம். உங்கள் வெற்றிகளை உறுதிசெய்யுங்கள் என்ற தொனியில் வடமாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் மேரிகமலா குணசீலன் ஆகியோர் தமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர்.
2 4
SHARE