மூவினத்தையும் சமமாகக் கருதுபவருக்கே ஆதரவு! அரசின் ஒட்டுண்ணிகளாக தமிழர்கள் இருக்கமுடியாது!- மன்னார் மறை மாவட்ட ஆயருமான அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்,

436

 

மூவினத்தையும் சமமாகக் கருதுபவருக்கே ஆதரவு! அரசின் ஒட்டுண்ணிகளாக தமிழர்கள் இருக்கமுடியாது!நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதுடன் சிங்கள – பௌத்தத்தை மட்டும் மையப்படுத்திய அரசமைப்பு மாற்றப்படுவது அவசியம் என வலியுறுத்திய தமிழ் சிவில் சமூகத்தின் தலைவரும் மன்னார் மறை மாவட்ட ஆயருமான அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப், ஜனநாயக ரீதியில் அரசமைப்பு உருவாக்கப்பட்டு மூவினத்தையும் சரிநிகராக கருத்தில் கொள்ளும் ஒருவரையே ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்கு ஆதரவளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் தமிழர் தரப்பு தொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசின் ஒட்டுண்ணித் தாவரங்கள் போன்றே இருக்கவேண்டும் என்ற கருதுநிலையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எவ்விதமான முடிவுகளையும் எடுக்காத நிலையில் ஆளும் – எதிர்த்தரப்புக்கள் பல்வேறு முனைப்புக்களில் கடும் பிரயத்தனத்துடன் காய்நகர்த்தல்களைச் செய்து வருகின்றமை தொடர்பில் வினவியபோதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்த சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசு தோல்விகண்டுள்ளது. இந்நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு என்பன மீளவும் கட்டியெழுப்பப்படாது அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் ரீதியான எதிர்காலமும் ஐயப்பாடான சூழ்நிலையிலேயே காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமையில்தான் ஜனாதிபதி தேர்தலொன்று நடத்தப்படுவதற்குரிய முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக இங்குள்ள அரசமைப்பின் பிரகாரம் ஆட்சியாளர்கள் சிங்களத்திற்கும், பௌத்தத்திற்கும் மட்டுமே முக்கியத்துவத்தை அளிக்கின்றார்கள். ஏனைய இனங்களையோ அல்லது மதத்தவர்களையோ கருத்திலெடுப்பது கிடையாது. அவர்களுக்குரிய மரியாதைகளையும் வழங்குவதும் கிடையாது. ஆகவே, சிங்களத்தையும் பௌத்தத்தையும் முதன்மைப்படுத்தியுள்ள அரசமைப்பு மாற்றப்பட்டு ஜனநாயக அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். இதன் மூலம் இந்த நாட்டிலுள்ள மூவினங்களும், மதங்களும் சரிநிகராக மதிக்கப்படும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும். அதேநேரம் நிறைவேற்று அதிகார முறைமையினால் தனியே ஒருவரிடத்தில் அதிகாரங்கள் குவிந்த கிடக்கின்றன. இதனால் அனைத்து நிர்வாகக் கட்டமைப்புக்களும் சுயாதீனமாக செயற்படமுடியாத நிலைமை உருப்பெற்று குடும்ப ஆட்சியொன்று நடைபெறுவதற்கு வழிசமைத்துள்ளது. இத்தகைய கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். அதாவது நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுவதுடன் நிர்வாக ரீதியான சுயாதீனமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவற்றை கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய பரிந்துரைகளையும் உறுதிமொழிகளையும் வழங்கும் ஒருவரையே அடுத்து ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்குரிய ஆதரவை தமிழ்த் தரப்பு வழங்க முடியும். தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் வேறுபட்ட தலைமைகளில் கீழ் மாறுபட்ட அனுபவங்களைக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, தமிழ்ர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசுகளின் ஒட்டுண்ணித் தாவரங்கள் போன்று இருக்க வேண்டும் என்ற கருதுநிலையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதனால் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காது என்ற அரிசியல் யாதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

SHARE