பொதுபல சேனா அமைப்பின் பகிரங்க ஆதரவை மைத்திரிபால சிரிசேனவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்-மகிந்தவின் அரசியல் இரஜதந்திரம்

431
mahinda-rajapaksa-honouring-buddhist-monksபொதுபல சேனா அமைப்பின் பகிரங்க ஆதரவை மைத்திரிபால சிரிசேனவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் மாநாட்டிற்காக நேபாளம் புறப்பட்டுச் செல்ல முன்னர் இது தொடர்பில் ஞானசார தேரரிடம் நேரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடலுக்கு ஞானசார தேரர், சுற்றிலும் கறுப்புக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஆடம்பர வாகனத்தில் அதிரடிப்படை பாதுகாப்புடன் அலரிமாளிகைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதுள்ள சூழ்நிலையில் பௌத்த மேலாதிக்க அரசாங்கத்தை நிறுவ வேண்டுமானால் பொதுபல சேனா அமைப்பு தந்திரோபாய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இதற்காக தனது கொள்கைகளில் சிறிது தளர்வுப் போக்கினை வெளிக்காட்ட வேண்டும்.

மேலும் பொதுபல சேனாவிற்கு சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிக்காட்டுகின்றனர். இதனை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது பொது பல சேனா தனது ஆதரவை மைத்திரிபாலவுக்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மேலும் அரசாங்கம் தொடர்பிலும் சிறிது விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகள் மைத்திரிபால சிரிசேன தரப்பிற்கு கிடைப்பதை தடுக்கலாம். மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பௌத்த சிங்கள வாக்குகள் தொடர்பில் தந்திரோபாய நகர்வின் ஊடாக அவற்றை அரசாங்கத் தரப்பிற்கு பெற்றுக் கொள்ள இன்னொரு நகர்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனை ஞானசார தேரர் மற்றும் அவருடன் வருகை தந்திருந்த திலந்த விதானகே ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து வரும் வியாழக்கிழமை பொதுபல சேனா ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தனது ஆதரவை மைத்திரிபால சிரிசேனவிற்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது.

 

SHARE