மகிந்தவின் மந்திரக்கோலுக்கு மடங்கிய சார்க் தலைவர்கள் -மூன்றாவது தடவையும் தேர்தலில் வெற்றிபெற சார்க் தலைவர்கள் மகிந்தவுக்கு வாழ்த்து

404
சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்கள் மூன்றாவது தடவையாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

காத்மண்டுவில் நடைபெற்ற பிராந்திய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்க் மாநாட்டுக்கு வருகை தந்த அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே சார்க் அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உச்சிமாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரைநிகழ்த்திய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள உள்ளார். அவருக்கு என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் போது தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் அமோக வெற்றியுடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவீர்கள் என்பது எங்களது மனமார்ந்த நம்பிக்கையும் பிரார்த்தனையாகும் என்றும் தெரிவித்தார்.

பூட்டான் பிரதமர் லைன் சென் செரின் தொபகே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று குறிப்பிட்டார்.

நேபாள பிரதமர் சுசில் கொய்ராலாவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய போது ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் அந்த சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான திருமதி சுஜாதா கொய்ராலாவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

ஜனாதிபதியாக உங்களைச் சந்திப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

SHARE