வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்துக்கு! நஞ்சாகிய உணவுகளை உண்டு நோயில் வீழ்ந்து சாவதா? மக்கள் விசனம்

364
வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு அனர்த்த நிவாரணமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக கடந்த சில வாரங்களாக நஞ்சாகிய உணவுகள் (பழுதடைந்த உருளைக்கிழங்குகள்) விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
குடும்பம் ஒன்றுக்கு தலா ஐந்து கிலோகிராம் வீதம் நிவாரணமாக வழங்கப்பட்டு வரும் அந்த உருளைக்கிழங்குகளில், அழுகிய கிழங்குகளை கழித்து ஒரு கிலோவைக்கூட தம்மால் உணவுத்தேவைக்காக தெரிந்து எடுத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வறுமை, பசி, பட்டினி காரணமாக குறித்த உருளைக்கிழங்குகளை உண்ட பலர் வயிற்றுக்கழிச்சல், வயிற்றுளைவு, வாந்திபேதி, ஒவ்வாமை நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
தமக்கு ஏற்பட்டுள்ள வறுமை, பசி, பட்டினி இவற்றை காரணம் காட்டி பழுதடைந்த கழிவு உணவுகள் எவற்றை வேண்டுமானாலும் தம்முன்னால் கொண்டு வந்து கொட்டுவதற்கு தாம் என்ன மந்தைகளா? நஞ்சாகிய உணவுகளை உண்டு தாம் என்ன நோயில் வீழ்ந்து சாவதா? எனவும் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
தொடர்புடைய செய்தி:

வடமாகாண மக்களுக்கு பழுதடைந்த உருளைக்கிழங்குகள் விநியோகம்! (ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன) 

வடமாகாண மக்களுக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக கடந்த சில வாரங்களாக நஞ்சாகிய உணவுகள் (பழுதடைந்த உருளைக்கிழங்குகள்) விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதன் பின்னணி என்ன? 
பல்தேசிய கம்பனி ஒன்றினால் பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பெருந்தொகை உருளைக்கிழங்குகள், இலங்கையின் அண்மைக்கால சீரற்ற காலநிலைமைகள் காரணமாக வெகுசீக்கிரமே பழுதடையத்தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் இயற்கையோடு போட்டிப்போட்டு அவற்றை களஞ்சியப்படுத்தி பாதுகாப்பாக வைத்தல் முடியாத காரியம் என்பதாலும், முட்டாள்த்தனமாக அவ்வாறு செய்தால் கம்பனி பெரும் நஸ்டத்தை எதிர்நோக்கும் என்பதாலும், கொள்வனவுக்காக செலவு செய்யப்பட்ட பணத்தையாவது (முதலையாவது) மீளவும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் குறித்த கம்பனி, இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இலாப நோக்க அடிப்படையில் இருதரப்பும் பரஸ்பர உடன்பாட்டுக்கு வந்ததையடுத்து, அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் வடமாகாணத்திலுள்ள அனைத்து உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளுக்கும் உடனடியாகவே “அனர்த்த நிவாரணத்துக்காக பயனாளிகளை தெரிவு செய்யுமாறு” அதாவது வரட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை தெரிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராம அலுவலர் பிரிவுகள் ஊடாக அவசர அவசரமாக பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக கடந்த சில வாரங்களாக நஞ்சாகிய உணவுகள் (பழுதடைந்த உருளைக்கிழங்குகள்) விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 2,500 குடும்பங்களுக்கு அழுகிய உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்குளம், குளவிசுட்டான், சின்னடம்பன், கொள்ளர்புளியங்குளம் கூட்டுறவுச்சங்க கிளைகளில் 1,500 கிலோகிராம் அழுகிய உருளைக்கிழங்குகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 4,000க்கும் மேல்பட்ட குடும்பங்களுக்கும், செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் 6,000க்கும் மேல்பட்ட குடும்பங்களுக்கும் அழுகிய உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டுள்ளன.
2   3
நஞ்சாகிய உணவுகள் (பழுதடைந்த உருளைக்கிழங்குகள்) அனர்த்த நிவாரணமாக வழங்கப்படுவதற்கு சிங்கள பகுதிகள் தெரிவுசெய்யப்படாமல், தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் மட்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை கீழ்மைத்தனமான ஒருவகை இனவழிப்பு நடவடிக்கை சிந்தனையாகும்.
இத்தனைக்கும் வடமாகாண கூட்டுறவுத்துறை அமைச்சராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனே உள்ளார். நஞ்சாகிய உணவுகள் (பழுதடைந்த உருளைக்கிழங்குகள்) தமக்கு நிவாரணமாக வழங்கப்பட்டமை தொடர்பில் மக்கள், முதலமைச்சரிடமும், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடமும்  முறையிட்டிருந்தும் அவர்கள் மக்களின் போசணை, உடல் நலம், ஆரோக்கிய வாழ்வு தொடர்பில் கரிசனை கொண்டு எந்தவொரு பிரக்ஜையையும் வெளிப்படுத்தியதாக தெரியவில்லை.
SHARE