வட மாகாணசபைக்கான வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீடு தொடர்பான விபரங்கள்

406

வடமாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முதல்வாசிப்பு

 

இந்நிலையில், எதிர்வரும் 16ம், 17ம், 18ம் திகதிகளில் வரவுசெலவு திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

குறித்த முதல் வாசிப்பில் முதலமைச்சர் குறிப்பிடுகையில்,

ஒவ்வொரு நிதியாண்டினதும் நிதிக் கூற்றானது 2010ம் ஆண்டின் 13ம் இலக்க மாகாணசபைகள் திருத்தச்சட்டத்தினால் திருத்தப்பட்ட 1987ம் ஆண்டின் 42ம் இலக்க மாகாணசபைகள் சட்டத்தின் பிரிவு 25ற்கு அமைய குறித்த நிதியாண்டு ஆரம்பமாவதற்கு ஆகக்குறைந்தது, ஒரு மாதத்திற்கு முன்னர் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுதல் வேண்டும்.

இதன் அடிப்படையில் இச்சபை முன் 2015ம் ஆண்டுக்கான நிதிக்கூற்றை சமர்ப்பிக்கிறேன். 2015ம் நிதி ஆண்டுக்கு எமது மாகாணசபை செலவினங்களுக்கு நிதி ஆணைக்குழுவினால் தேசிய வரவு செலவு திட்ட திணைக்களத்திற்கு,சிபார்சு செய்யப்பட்ட ஒதுக்கீட்டு தொகைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

மீண்டுவரும் செலவீனங்களுக்காக 15122.04 மில்லியன், உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாற்றுவதற்கான முத்திரை தீர்வை கட்டணமாக 0.6 மில்லியன், மூலதன செலவீனங்களுக்காக 2735.69 மில்லியன், இதில் பிரமாண
அடிப்படையிலான கொடை ரூபா 400 மில்லியன், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை ரூபா 1440 மில்லியன், பாடசாலைக்கல்வி ஓர் அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டம் ரூபா 364.66 மில்லியன், சுகாதாரத்துறை அபிவிருத்திக் கருத்திட்டம் ரூபா 355 மில்லியன், யுனிசெப் கருத்திட்டம் ரூபா 26.03 மில்லியன், மாகாணசபை கட்டடம் கைதடி ரூபா 150 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய திட்டங்களுக்கான ஒதுக்கீடாக ரூபா 2702.11 மில்லியன் ரூபாவும் ஆகும். இதில் மீண்டு வரும் செலவீனங்களுக்காக, சிபார்சு செய்யப்பட்ட தொகையான ரூபா 15122.04 மில்லியனில் மத்திய அரசால் தொகுதிக் கொடையாக ரூபா 12800 மில்லியனும் மத்திய அரசு வருமானமாக ரூபா 1975 மில்லியனும் மாகாணசபை வருமானமாக ரூபா 347.04 மில்லியனும் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.

மேலும் எதிர்பார்க்கப்படும் மேற்படி ஒதுக்கீட்டு தொகைகளுக்கமைவாக, மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள ரீதியாக அவற்றின் முன்னுரிமை தேவைகளைப் பொறுத்து வருடாந்த நிதிக்கூற்றினை தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

சபையின் தீர்மானங்களை தெரியப்படுத்தாவிட்டால் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம்

வடமாகாணசபை அமைச்சரவை தீர்மானங்களை எமக்கு தெரியப்படுத்தாவிட்டால் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் என மாகாணசபையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மாகாணசபை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை தமக்கும் தெரியப்படுத்துங்கள் என மாகாணசபை உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி தீர்மானங்கள் வழங்கப்படாமல், தொடர்ந்தும் காலதாமதம் காட்டப்பட்டு வரும் நிலையில், இன்றைய 20வது அமர்வில் பேசிய மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் விந்தன் ஆகியோர் குறித்த தீர்மானங்களை எமக்கு தாருங்கள் அல்லது இணையங்களில் வெளியிடுங்கள் எனக்கேட்டனர்.

ஆனால் அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், குறித்த கூட்டம் சபை அமர்விற்கு முதல்நாள் மாலை நடைபெறுவதனால் ஒரு இரவுக்குள் அதனை எடுத்து கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே நீங்கள் அதனை பின்னர் வந்து பார்க்கலாம் என கூறினார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மேற்படி உறுப்பினர்கள் அமைச்சரவை கூட்டத்தை சபை அமர்வுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே நடத்தி அதன் தீர்மானங்களை உறுப்பினர்களுக்கு கொடுங்கள், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அடுத்த அமர்வில் எமக்கு அந்த தீர்மானங்கள் தரப்படாவிட்டால் 2015ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் நிர்ப்பந்தத்திற்கு நாம் தள்ளப்படுவோம் என தெரிவித்துள்ளனர்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszCTYKZju3.html#sthash.1McJfPaj.dpuf

SHARE