ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெயக்குமாரி ஆகியோரது விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் மனித உரிமைகள் மாநாடு

395
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஜெகதீஸ்வரன், மற்றும் ஜெயக்குமாரி ஆகியோரது விடுதலையை வலியுறுத்தி கி்ளிநொச்சியில்  மனித உரிமைகள் மாநாடு  நடைபெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெயக்குமாரி ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தியும் அனைத்துத் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், காணமாற் போனோர் கண்டறிப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கட்சியின் தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நேற்று  காலை 11.00 மணியளவில் ஈகைச்சுடரேற்றி உயிர்நீத்த மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கடந்த மே 23ம் திகதி கைது செய்யப்பட்டு பூசா முகாமில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெகதீஸ்வரனையும், கடந்த மார்ச் 13ம் திகதி கைது செய்யப்பட்டு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி அவர்களையும் உடன் விடுதலை செய்யவேண்டும் எனவும், சிறையிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படல் வேண்டும் எனவும், காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்படல் வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து உரையாற்றிய அவர் ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெயக்குமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டமையானது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளை முடக்கி
அச்சுறுத்தும் நோக்கிலேயே சிங்கள அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சர்வதேச அளவில் கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறைகளை ஒழிப்போம் என்ற கருப்பொருளை பிரகடனப்படுத்தி பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறைகளுக்கு எதிராக உலகம் அணிதிரண்டுள்ளது. ஒரு தேசிய விடுதலைக்காக போராடும் நாமும் பெண்கள் சிறுமிகள்
மீதான வன்முறைகளை எமது சமூகத்திலிருந்து ஒழிக்காமல் பூரண விடுதலையை பெற
முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.எ.ஆனந்தராசா வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், வல்வெட்டித்துறை பிரதேசசபை உறுப்பினர் சதீஸ், வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சுப்பிரமணியம், கரவெட்டிி பிரதேசசபை உறுப்பினர் மதியரசன், இரணைமடு விவசாய சம்மேளனத் தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றிருந்தார்கள்.

இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் செம்மஞ்சள் சால்வைகளுடன் கலந்து கொண்டு மனித உரிமைகளை வலியுறுத்தியிருந்தனர்.

kili_humnarightmeet_002

kili_humnarightmeet_023

 

SHARE