ஒரு கோப்பை தேனீர் கொடுத்தால் ரணிலும் எங்களோடு இணைந்து விடுவார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

379

 

ok-768x1024ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பமானது.

கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்தப் பொதுக்கூட்டம் தற்போது அநுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த கூட்டத்தில் உரையாற்றினார்.

நீங்கள் எங்கள் செயலாளரை எடுத்தால் நாங்களும் உங்கள் செயலாளரை எடுப்போம். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. இரண்டு பேரும் உட்கார்ந்து கோபி ஒன்றுதான் குடித்தோம். நாங்கள் நினைத்தால் ரணிலையும் எங்கள் பக்கம் எடுக்க முடியும். ஒரு கோப்பை தேனீர்  கொடுத்தால் ரணிலும் எங்களோடு இணைந்து விடுவார் என்று  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எங்களுடைய இராணுவம் ஒரு நாளும் பொது மக்களை கொலை செய்ய வில்லை .ஆரம்பத்தில் மக்கள் என்னிடம் யுத்தத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களுக்காக நான் யுத்தத்தை நிறுத்தினேன். அதன் பின்பு நாட்டை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டு கொண்டனர். அதனையும் நான் நிறைவேற்றினேன். மேலும் என் கையில் இரத்தம் படியவில்லை, படிந்தால் கையை வெட்டி வீசிவிடுவேன்.

இம்முறை நான் ஜனாதிபதியான பின்பு அநுராதபுர மக்களுக்கு சுத்தமான குழாய் நீர் வழங்குவதே எனது திட்டமாகும்.

நாங்கள் இந்த முறை குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து வரவு செலவு திட்டத்தினை செய்யவில்லை. மக்களோடு இறங்கி வந்து அவர்களுடைய கஷ்டத்தனை அறிந்து இந்த வரவு செலவு திட்டத்தினை தயாரித்துள்ளோம்.

எதிர்வரும் காலத்தில் நாட்டினை ஒற்றுமையான பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்கமாகும். அனைவரும் பொறுமையாக இருந்து இந்த ஜனாதிபதி தேர்தல் வெற்றியினை பாருங்கள் என்று தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த அரசு இழந்தது!

அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இழந்துள்ளது

மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்தின, துமிந்த திசாநாயக்க, நவீன் திசாநாயக்க, பாடலி சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரோ, சிகல உறுமய தலைவர் சோபித தேரர், குணசேகர, வசந்த, கலாநிதி ரஜிவ விஜேசிங்க, ஹூனைஸ் பாருக், இராஜதுரை, திகாம்பரம், சந்திரசேகரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணியில் இணைந்துள்ளார்.

மேலும் மேல்மாகாணசபை, ஊவா மாகாணசபை, வடமேல் மாகாணசபை, சப்ரகமுவ மாகாணசபைகளில் உள்ள 9 ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு மாறியதால் அதனை மீள அரசுக்கு ஆட்சி நடத்த முடியாமல் போயுள்ளது.

இச் சபைகள் வரவுசெலவுத்திட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் கூடுவதாக பிற்போடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையும் கடந்த வாரம் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறாது பிற்போடப்பட்டுள்ளது.

18 வது அரசியல் திருத்தத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் 8 உறுப்பினர்களும் சேர்ந்து 3ல் இரண்டு பெரும்பான்மையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஜனாதிபதி 3வது முறை தேர்தலில் குதிப்பதற்கும் ஆதரவு வழங்கி முஸ்லீம் காங்கிரஸ் முட்டுக்கொடுத்தது. ஆனால் இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்குச் சென்றதால் 165 பாராளுமன்ற உறுப்பினர்களில் 151 மிஞ்சியுள்ளனர்.

இதில் எதிர்க்கட்சியிலிருந்து அரச பக்கம் வந்த திஸ்ச அத்தநாயக்க, கெட்டகொட உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இனி அரசுக்கு எந்தவொரு அரசியலமைப்பையும் பாராளுமன்றத்தில் வெற்றி கொள்ள முடியாத ஏற்பட்டுள்ளது.

நாளை அல்லது மறுநாள் யார் யாரெல்லாம் எதிரணிக்கு வரவுள்ளார்கள் என்ற விபரங்கள் வெளிவராத போதும், அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஆகக் குறைந்தது 113 பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பிரச்சாரக் கூட்டத்திற்கு முன் தலதா மாளிகை சென்று ஆசீர்வாதம் பெற்ற மஹிந்த

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு செல்ல முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிவட்டார். அஸ்கிரிய -மல்வத்தை பீடாதிபதிகளை சந்தித்து ஆசிர்வாதமும் பெற்றார்.

அடுத்து கண்டி மீராம்மக்காம் பள்ளிவாசலில் நடைபெற்ற துஆ பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி கண்டி மீராம்மக்காம் பள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்ரப் மௌலவி இந்த துஆ பிரார்த்தனையை நடத்தி வைத்தார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த,கெஹெலிய ரம்புக்வெல்ல ,ஜீ.எல்.பீரிஸ் ,மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ,பிரதி அமைச்சர் அப்துல் காதர்,பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்த ,திலும் அமுனுகமஇ ஜனாதிபதியின் செயலகப்பிரதானி காமினி செனரத் ஆகியோரும்  இந்த சமய நிகழ்வுகளில் கலந்துக் கொண்டனர்.

ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினால் சாதாரண தர மாணவர்களுக்கு பாதிப்பு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

அனுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்திற்காக அனுராதபுரம் மற்றும் பொலனறுவை பஸ் டிப்போக்களின் 115 பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவியர் போக்குவரத்து செய்வதில் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்தில் காணப்படும் 125 பஸ்களில் 85 பஸ்களும் பொலனறுவையில் 60 பஸ்களில் 30 பஸ்களும் கட்சி ஆதரவாளர்களை போக்குவரத்து செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கபே குற்றம் சுமத்தியுள்ளது.

 

SHARE