புலிகளின் கொள்கைகளை TNA கைவிட வேண்டும் – ஆனந்தசங்கரி

505

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள் கோட்பாடுகளை உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.

images

North_MPs_1
இலங்கையின் 67ம் சுதந்திர தின நிகழ்வுகளின் போது அரசாங்கம் மூன்று மொழிகளிலும் நல்லிணக்கம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தினை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபங்கு தெடர்பில் அதன் தலைவர்கள் பேச முன்வர வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உறவுகளை முற்று முழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துண்டிக்க காலம் தாமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு பிரபாகரனின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் கொள்கைகளை இதுவரையில் கைவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன கடுமையான தீர்மானம் ஒன்றை எடுத்து பொதுத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தார் எனவும் சிங்கள மக்கள் பேதங்களை களைந்து அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சில அர்ப்பணிப்புக்கள் செய்திருக்காவிட்டால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தமிழர் விடுதலைக் கூட்டணியோ தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்றிருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பழைய கொள்கைகளை கைவிட்டதாக இதுவரையில் தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக அந்தக் காலத்தில் சில விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பமின்றி செய்தது எனினும் அதனை தற்போது ஒப்புக்கொள்வதற்கு தயங்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுதந்திர தின நிகழ்வின் போது முக்கிய பிரபுக்களுக்கான வரிசையில் தமக்கு ஆசனம் ஒதுக்கப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE