இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி கிரிக்கெட் ரசிகர்கள்

449

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டி போல விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டி இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்டது.

தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்த போதே அந்த போட்டி பற்றி சமூக வலைத் தளங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான ‘‘பேஸ்புக்’’ வலைத்தளத்தில் ரசிகர்களின் சூடான விவாதமும் நடந்தது.

சுமார் 2½ கோடி கருத்துக்கள் வெளியிடப்பட்டு இந்த விவாதம் நடந்ததாகவும் உலக அளவில் இது ஒரு சாதனை என்றும் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 90 லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த விவாதத்தை நடத்தியது தெரிய வந்துள்ளது.

பேஸ்புக் வலைத்தள விவாதத்தை அதிகம் நடத்தியது இந்தியர்கள்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. சுமார் 60 லட்சம் இந்தியர்கள் விவாதத்தில் பங்கேற்று 1½ கோடி தடவை கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் பாகிஸ்தானியர்கள் சுமார் 10 லட்சம் பேர்தான் அந்த போட்டி பற்றி பேச சமூக வலைத்தளம் பக்கம் வந்திருந்தனர்.

டுவிட்டர் தளத்தில் சுமார் 17 லட்சம் பேர் இந்தியா – பாகிஸ்தான் போட்டி பற்றிய தங்கள் கருத்தை வெளியிட்டிருந்தனர். சமூக வலைத்தள விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய வீரர் விராட்கோலி பற்றியும் 5 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் சோகைல்கான் பற்றியும் அதிகமாக கருத்துக்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, சச்சின் தெண்டுல்கர், யுவராஜ்சிங், நடிகர்கள் ஷாருக்கான், அமிதாப்பச்சன் ஆகியோரது டுவிட்டர் கருத்துக்கள் பலராலும் மறுபடியும் வெளியிடப்பட்டது.

SHARE