ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்கு மைத்திரி அரசு மறைமுகமாகக் காட்டிய பச்சைக்கொடியாகும்.

433

 

SAMSUNG CAMERA PICTURES

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீதான ஐ.நா. விசாரணையின் அறிக்கை மார்ச் மாதம் ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்கப்படுவதை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஐ.நா. ஆணையாளர் சையத் அல் – ஹுசைன் பரிந்துரைத்துள்ளமையை நாம் உதாசீனம் செய்து விமர்சிக்கக்கூடாது. ஏனெனில், இந்த 6 மாத காலத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கை மேலும் பலமடைந்து வலுவானதாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

SAMSUNG CAMERA PICTURES

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. நீதியைப் பெற்றுத் தந்தே தீரும். எனவே, ஐ.நா. சபையுடன் நாம் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்படுவோம் என்றும் அவர் கூறினார். மைத்திரி அரசின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய ஐ.நாவின் விசாரணை அறிக்கை மார்ச் மாத ஜெனிவா அமர்வில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு ஐ.நா. ஆணையாளர் சையத் அல் – ஹுசைன் பரிந்துரைத்துள்ளார்.

தனது பரிந்துரைக் கடிதத்தில், “மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் எனது அலுவலகத்துடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படத் தயராக இருப்பதாக இலங்கை அரசு மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது; உறுதியும் வழங்கியிருக்கின்றது. கடந்த அரசு இதனைச் செய்ய மறுத்திருந்தது. இதனைக் கருத்தில்கொண்டு அறிக்கையை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளேன். சிக்கலான நிலைமையின் மத்தியில் இந்த முடிவை எடுத்தேன். எனவே, ஒரேயொரு தடவை மாத்திரம் ஒத்திவைப்பு இடம்பெறும். செப்டெம்பர் மாத அமர்வில் அறிக்கை கட்டாயம் சமர்ப்பிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். அவரின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமைகள் பேரவை, விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்ரெம்பர் மாத அமர்வில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சார்பில் கடிதமொன்றை அனுப்பியிருந்தேன். அந்தக் கடிதத்தில் திட்டமிட்டவாறு இலங்கை மீதான ஐ.நா. விசாரணை அறிக்கையை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்குமாறும் அதனை தாமதப்படுத்தவேண்டாம் எனவும் கோரியிருந்தேன். அதற்கான காரணங்களையும் விளக்கியிருந்தேன்.

விசாரணை அறிக்கையானது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதுடன் மாத்திரம் நிற்காது அரசியல் தீர்வும் கிடைக்க வழிவகுக்கவேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு நான் கொண்டுவந்திருந்தேன். இது தொடர்பில் அண்மையில் எம்மைச் சந்தித்த அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளிடமும் நாம் விரிவாக எடுத்துரைத்திருந்தோம். ஏனெனில், கடந்த வருடம் ஜெனிவா அமர்வில் இலங்கை மீதான ஐ.நா. விசாரணையை அமெரிக்காவும், பிரிட்டனுமே கூட்டுச் சேர்ந்து முன்மொழிந்திருந்தன.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்களையும், சர்வதேச விசாரணையையும் ஆட்சியில் இருந்த மஹிந்த அரசு நிராகரித்து வந்தது. ஆனால், மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்துடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படவுள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான புதிய அரசு தெரிவித்தது. இது ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்கு மைத்திரி அரசு மறைமுகமாகக் காட்டிய பச்சைக்கொடியாகும்.

அதேவேளை, மார்ச் மாத அமர்வில் இலங்கை மீதான ஐ.நா. விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டாம் எனவும், அதனைத் தாமதப்படுத்துமாறும் ஐ.நாவிடமும், விசாரணைப் பிரேரணையை ஜெனிவாவில் கொண்டுவந்த அமெரிக்காவிடம் புதிய அரசு நேரடியாகக் கோரியிருந்தது. இதனை எழுத்துமூலமும் புதிய அரசு சமர்ப்பித்திருந்தது. இதனை உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே செப்டெம்பர் மாதம் வரை அறிக்கை சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கட்டாயம் ஐ.நா. அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்தும் உள்ளார்.

எனவே, இதனை நாம் உதாசீனம் செய்து விமர்சிக்கக்கூடாது. ஏனெனில், இந்த 6 மாத காலத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கை மேலும் பலமடைந்து வலுவானதாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இந்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவும், பிரிட்டனும் குறியாக உள்ளன. நிச்சயம் இந்த அறிக்கை செப்ரெம்பர் மாதம் வலுவானதாக வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில் நாம் உள்ளோம் –

SHARE