பகிடிவதையின் கொடுமை – சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி தற்கொலை – கிணற்றில் வீழ்ந்து பெண்ணொருவர் பலி

360
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ். எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹோமாகமவை சேர்ந்த குறித்த மாணவி நேற்று தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிடிவதை காரணமாகவே அவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதுடன் அதில் தனது சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தனது பூதவுடலை பார்வையிடுவதற்கு அனுமதிக்க வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு சொந்தமான நிலக் காணியை அனாதை ஆச்சிரமத்திற்கு எழுதி வைக்குமாறும், இது போன்ற மரணங்கள் இனிமேல் நிகழாமல் இருக்க வேண்டும் எனவும் எழுதி வைத்துள்ளார்.

கிணற்றில் வீழ்ந்து பெண்ணொருவர் பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன மட்டுகலை தோட்டத்தில் பெண்ணொருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரக்கறி தோட்டத்தில் நேற்று தண்ணீர் பாய்ச்சி கொண்டியிருந்த 55 வயது மதிக்கதக்க குடும்ப பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரக்கறி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும் வேளையில் மேற்படி மரக்கறி தோட்டத்தில் இருந்த கிணற்றில் குறித்த பெண் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் கிணற்றில் விழுந்திருப்பதை கண்ட பிரதேசவாசிகள் அவரை, தூக்கி கொண்டு தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வேளையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளது.

3 பிள்ளைகளின் தாயான பூபாலன் மல்லிகாதேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE