வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி மார்ச் 2-ந் தேதி தொடங்குகிறது தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர்ப் பயிற்சி

355

 

வடகொரியாவின் கடும் எதிர்ப்பை மீறி, தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி மார்ச் 2-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948-ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன. 1950-53 ஆண்டுகளில் இரு நாடுகள் இடையே போர் நடந்தது. அதைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளும் பரம எதிரிகளாக விளங்கி வருகின்றன.இந்த நிலையில், தென் கொரியாவும், அமெரிக்காவும் ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருவது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. தன் பங்குக்கு வடகொரியாவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிநவீன அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.இந்த நிலையில், நடப்பாண்டில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால், அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வடகொரியா அறிவித்தது.

ஆனால் இதை தென்கொரியாவும், அமெரிக்காவும் நிராகரித்து விட்டன. வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் வழக்கம் போல இந்த ஆண்டும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தென்கொரிய ராணுவ செய்தி தொடர்பாளர் கிம் மின் சியோக், சியோலில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறும்போது, “தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர்ப்பயிற்சி மார்ச் 2-ந் தேதி தொடங்கும். மார்ச் 13-ந் தேதி முடியும். களப்பயிற்சி ஏப்ரல் 24-ந் தேதி வரை தொடரும்” என்றார்.

களப்பயிற்சியை பொறுத்தமட்டில், முப்படைகளிலும் பயிற்சி வழங்கப்படும். இதில் 2 லட்சம் தென்கொரிய துருப்புகளும், 3 ஆயிரத்து 700 அமெரிக்க துருப்புகளும் இணைந்து செயல்படுவர்.

இந்த கூட்டு போர்ப்பயிற்சி அறிவிப்பு வழக்கம்போல, வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 4-வது முறையாக அந்த நாடு அணுக்குண்டு சோதனையை நடத்தினாலும் வியப்பில்லை.

வடகொரியா அரசின் செய்தித்தாள், “தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர்ப்பயிற்சியின் நோக்கம், வடகொரியாவை தாக்கி ஆக்கிரப்பதுதான்” என கூறி உள்ளது.

ஆனால் கூட்டு போர்ப்பயிற்சியை தற்காப்பு நடவடிக்கை என்று அமெரிக்காவும், தென்கொரியாவும் கூறுகின்றன.

இதற்கிடையே வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், 2 தினங்களுக்கு முன் தனது உழைப்பாளர் கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தில் உரை ஆற்றினார். அப்போது அவர், நாட்டின் ராணுவம் கூடுதலான ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE