டோனி மூத்த பத்திரிக்கையாளரை சரமாரியாக கிண்டல் செய்துள்ளார்.

381
 

இந்திய அணித்தலைவர் டோனியிடம் பேச்சுக் கொடுத்த மூத்த புகைப்படப் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பெர்த்தில் வலை வேலி அருகே இந்திய அணித்தலைவர் டோனி நின்று கொண்டிருந்த போது அவரிடம் மூத்த புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் பேச்சு கொடுத்தார்.

டோனியிடம், “மாஹி (டோனி) நீங்கள் 2004-05ம் ஆண்டுகளில் அட்டகாசமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பீர்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை” என்றார்.

அதற்கு டோனி, “பொய் சொல்லாதீர்கள். 2004ம் ஆண்டு உங்களுக்கு என்னை தெரியவே தெரியாது. நீங்கள் என்னவென்றால் புகைப்படத்துக்கு நான் போஸ் கொடுப்பது பற்றி கூறுகிறீர்கள்.” என்றார்.

உடனே அந்த புகைப்பட பத்திரிகையாளர், “நீங்கள் அறிமுகமான வங்கதேசத் தொடரின் போது நான் இருந்தேன்.” என்றார்.

டோனி மீண்டும், “நான் வங்கதேசத்துக்கு எதிராக எனது அறிமுகப்போட்டியில் ஆடினேன் என்று உங்களுக்கு யார் கூறியது? அது கூட உங்களுக்குத் தெரியவில்லை”என்று கேலிச்சிரிப்புடன் கூறினார். (டோனி டிசம்பர் 2004ல் வங்கதேசத்துக்கு எதிராக தன் முதல் போட்டியில் ஆடினார்).

உடனே புகைப்பட பத்திரிகையாளர், “ஒருவேளை ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் போட்டியில் ஆடினீர்களா?” என்று கேட்க, சுற்றி இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.

புன்னகைத்தபடியே டோனி, “பாருங்கள்… இதனால் தான் பத்திரிகையாளர்களை நம்பக்கூடாது” என்று கிண்டலாக கூறியுள்ளார்.

SHARE