வார்னர் மிரட்டல் சதம்.. 21 பந்தில் அரைசதம் விளாசிய மேக்ஸ்வெல்: அவுஸ்திரேலியா 417 ஓட்டங்கள் குவிப்பு

363
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 417 ஓட்டங்கள் குவித்துள்ளது.அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில், இன்று நடக்கும் உலகக்கிண்ண தொடருக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் முகமது நபி, களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆரோன் பின்ச் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 4வது சதத்தை பதிவு செய்தார்.

இவருக்கு ஜோடி சேர்ந்து ஒத்துழைப்பு தந்த ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 260 ஓட்டங்கள் சேர்த்த போது வார்னர் (178) ஆட்டமிழந்தார். இவர் 19 பவுண்டரி, 5 சிக்சர் விளாசினார்.

ஸ்டீவன் ஸ்மித் (95) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல், 21 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்து பால்கனர் (7) ஒரு பவுண்டரி அடித்த நிலையில் வெளியேறினார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த மேக்ஸ்வெல் சிக்சர்களாய் வானவேடிக்கை காட்டினார். இவர் 88 ஓட்டங்கள் (6 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த மார்ஷ் (8) ஆட்டமிழக்க, ஹட்டின் (20) களத்தில் இருந்தார். அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 417 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

ஆப்கானிஸ்தான் சார்பில் ஷபூர் ஜட்ரன், தாவ்லத் ஜட்ரன் தலா 2 விக்கெட்டுகளையும், ஹமிட் ஹசன், நவ்ரோஸ் மங்கள் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

SHARE