அசத்திய தென்ஆபிரிக்கா அரையிறுதிக்கு தகுதி 

406
இலங்கை அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதியில் அசத்திய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதி சுற்று இன்று தொட‌ங்கியது. இதில் சிட்னியில் நடக்கும் முதல் காலிறுதியில் இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

அதன் படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் பெரேரா (3) ஏமாற்றினார். ஸ்டைன் ‘வேகத்தில்’ டில்ஷான் `டக்–அவுட்’ ஆனார்.

இதைத் தொடர்ந்து இம்ரான் தாகிர் ‘சுழலில்’ திரிமான்னே (41), ஜெயவர்த்தனே (4) ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த அணித்தலைவர் மேத்யூஸ் (19) டுமினி பந்தில் ஆட்டமிழந்தார். சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா (0) இம்ரான் தாகிர் பந்தில் நடையை கட்டினார்.

மேத்யூஸை வீழ்த்திய வேகத்தில் பந்து வீசிய டுமினி, நுவன் குலசேகரா (1), தரந்து குஷல் (0) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

கடைசி வரை இலங்கை அணிக்காக போராடிய நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா 96 பந்துகளை எதிர்கொண்டு 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மலிங்காவும் (3) இம்ரான் தாகிர் சுழலில் சிக்க, இலங்கை அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா சார்பில், இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளையும், டுமினி 3 விக்கெட்டுகளையும், மொர்கல், அப்போர்ட், ஸ்டெய்ன் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அம்லா (16) சிறப்பான தொடக்கம் கொடுத்தார். இவர் மலிங்காவின் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த டி காக், டுபிளசி ஜோடி பொறுமையாக விளையாடியது. இலங்கை அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி 18 ஓவர்களிலே இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி பெறச் செய்தது.

இதனால் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. லீக் சுற்றில் அசத்திக் காலிறுதியில் கோட்டைவிட்ட இலங்கை அணி பரிதாபமாக தொடரை விட்டு வெளியேறியது.

 

SHARE