ஊழியர்களுக்கு பில்கேட்ஸ் உற்சாக மெயில்

343

கம்ப்யூட்டர் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் இன்று தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. மைக்ரோசாப்டின் 40 வது பிறந்த நாளை முன்னிட்டு அதன் நிறுவனர் பில்கேட்ஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயிலில் கடந்த காலத்தைவிட எதிர்காலத்திலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும், அடுத்த பத்தாண்டுகளில் கம்யூட்டர் துறையில் மேலும் வேகமான மாற்றங்கள் ஏற்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிறுவன சி.இ.ஓ சத்யா நாதெள்ளாவுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1975 ம் ஆண்டு ஏபரல் 4 ம் தேதி பில் கேட்ஸ் தனது நண்பர் பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை துவக்கினார். அதன் பிறகு கம்ப்யூட்டர் உலகில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உருவாகிய மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
இதனை முன்னிட்டு அதன் நிறுவனர் பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர்கள் அனைவருக்கும் இமெயில் மூலமான கடிதத்தில் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் நானும் பால் ஆலனும் ஓவ்வொரு வீட்டு மேஜையிலு கம்ப்யூட்டர் எனும் இலக்குடன் துவங்கிய போது அது துணிச்சலான எண்ணமாக இருந்தது. இது சாத்தியம் என நினைப்பதற்காக எங்களுக்கு கிறுக்கு பிடித்திருப்பதாக பலரும் நினைத்தனர். ஆனால் அதன் பிறகு கம்ப்யூட்டர் துறையில் எத்தனை வேகமாக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிரது. இந்த புரட்சியில் மைக்ரோசாப்டின் பங்கை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்” என்று இந்த மெயிலின் துவக்கத்தில் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் இப்போது மைக்ரோசாப்டின் கடந்த காலத்தை விட எதிர்காலம் பற்றியே அதிகம் யோசிப்பதாகவும் அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்டர் துறையில் இன்னும் வேகமான மாற்றங்கள் ஏற்பட இருப்பதாகவும் கூறியுள்ள கேட்ஸ் கம்ப்யூட்டர் மேலும் நீக்கமற எல்லா இடங்களிலும் ஊடுருவும் என்று கூறியுள்ளார்.

இந்த மாற்றங்களை பயன்படுத்திக்கொண்டு முன்னேற சத்யா நாதெள்ளா தலைமையில் முன்பு இருந்ததைவிட சிறந்த நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 ஆண்டுகளில் சாதித்ததை விட அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியமானது என்றும் அவர் முத்தாய்ப்பாக கூறியுள்ளார்.

கேட்ஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய இந்த கடிதம் டிவிட்டரில் ஊழியர்கள் சிலரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

SHARE