மரம்வெட்டும் தமிழ் கூலித் தொழிலாளர்கள் 12 பேர் சுட்டுக்கொலை

339
இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது இன்று அதிகாலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 20 வரையிலான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

திருப்பதியில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில், ஸ்ரீவாரிமெட்டு என்ற இடத்தில் இன்றுகாலை நடந்த இந்த சம்பவத்தில், 20 பேர் ஆந்திர மாநில வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்ற கூலித் தொழிலாளர்களே, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகாலை 5 மணியளவில் சேசாசலம் வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை, காவல்துறையினர் சுற்றி வளைத்ததாக ஆந்திர மாநில காவல்துறை அதிகாரி கன்டா ராவ் தெரிவித்தார்.

அவர்கள் ஆயுதங்களுடன் காவல்துறையினரைத் தாக்க முயற்சித்ததாகவும், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 பேர் பலியானதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட 20 பேரில், 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகா கேவலம்… ஆந்திர வெறியாட்டத்தை உடனடியாக கண்டிக்கத் தவறிய தமிழக திராவிடக் கட்சிகள்!!

ஆந்திர போலீஸார் நடத்திய கொலை வெறித் தாக்குதலை உடனடியாக கண்டிக்கத் தவறியுள்ளன தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்சிகள்.

இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சம்பவம் நடந்து இத்தனை நேரமாகியும் இதுவரை திமுகவிடமிருந்தோ, அதிமுகவிடமிருந்தோ, தேமுதிகவிடமிருந்தோ இன்னும் பிற கட்சிகளிடமிருந்தோ ஒரு கண்டனம் கூட வரவில்லை.

பாஜக மட்டும் கருத்துக் கூறியுள்ளது.

செம்மரம் வெட்டிக் கடத்தும் கும்பலால் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமே இல்லாமல் மிகக் கொடூரமாக குருவி சுடுவது போல சுட்டுத் தள்ளியுள்ளது ஆந்திர போலீஸ்.

20 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து இதுவரை தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எதுவும் கண்டனம் தெரிவிக்காமல் உள்ளன.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிவிகளிலும் சன் டிவி மட்டுமே ஆரம்பத்திலிருந்தே இந்த செய்தியை காட்டி வந்தது.

பிற டிவிகளில் ஒரு சின்ன பிளாஷ் கூட போடவில்லை. நீண்ட நேரம் கழித்தே போட ஆரம்பித்தனர்.

முக்கிய கட்சிகள் இப்படி இத்தனை தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வாய் மூடி மெளனம் காப்பது பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.

வாய் கிழிய பேசும் தலைவர்கள் கூட கப்சிப் என்று இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமையானது.

SHARE