ஒரு போட்டிக்கு ரூ.10,000 கோடி.. சூதாட்டத்தில் 4 சூப்பர் கிங்ஸ் வீரர்கள்: லலித் மோடி பரபரப்பு தகவல்

330
ஐபிஎல் போட்டிகளில் 4 சென்னை வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.அவர் ஐபிஎல் ஆணையராக இருந்த போது மிகப் பெரிய அளவில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவர் மீது சென்னை பொலிசில் பிசிசிஐ சார்பில் ரூ. 100 கோடி நிதி முறைகேடு தொடர்பான புகாரும் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தலைமறைவான லலித் மோடி நாட்டை விட்டே ஓடி விட்டார். தற்போது லண்டனில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி பிசிசிஐ மற்றும் ஐசிசி மீது புகார்களைக் கூறி வருகிறார்.

இந்நிலையில் பிரேக்கிங் ஸ்டோரி என்ற பெயரில் லலித் மோடி சூதாட்டம் தொடர்பாக சரமாரியாக டிவிட்களைப் போட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

அதில் மரியாதைக்குரிய உச்சநீதிமன்றம், சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் பெயர்களை வெளியிடுவதாக இருந்தால் அதில் குறைந்து 4 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த சூதாட்டத்தில் ஒரு போட்டிக்கு ரூ. 9000 கோடி முதல் ரூ. 10,000 கோடி வரை மிக பெரிய அளவில் பணம் புழங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஜோக்கர்களான பிசிசிஐ, ஐசிசி, ஐபிஎல், இந்தியா சிமெண்ட்ஸ், அனுராத் தாக்கூர் ஆகியோர் மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்.

இதுகுறித்து நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். இனி உண்மையான சாத்தான் யார் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

SHARE