பாக். கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க சதி: லாகூர் மைதானம் அருகே குண்டு வெடித்தது

341

2009–ம் ஆண்டு லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கன். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட தயக்கம் காட்டினார்கள். இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகின்றன. நேற்று இரவு லாகூர் கடாபி மைதானத்தில் 2–வது ஒருநாள் போட்டி நடந்தது.

இந்த போட்டி நடந்து கொண்டிருந்தபோது மைதானத்தை நோக்கி ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அதை போலீஸ்காரர் அப்துல் மஜீத் தடுத்து நிறுத்தினார். அப்போது ஆட்டோவில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த போலீஸ்காரர் பலியானார். 3 பொதுமக்கள் காயம் அடைந்தனர். ஆட்டோவை ஓட்டி வந்த நபரும் பலியானார். கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஆட்டோவில் குண்டுகளை நிரப்பி மைதானத்தில் தற்கொலை தாக்குதல் நடத்த சதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லாகூர் போலீஸ் தலைமை அதிகாரி அமீன் கூறுகையில், ‘இது தற்கொலை தாக்குதல் என்று கூறுவது தவறானது. ஆட்டோவில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து இருக்கிறது. அதன் மாதிரிகளை சேகரித்து இருக்கிறோம். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றார்.

SHARE