இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன் குவித்தவர்: கிரஹாம் கூச்சின் சாதனையை முறியடித்தார், குக்

374
இங்கிலாந்து – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்திருந்தது.இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 350 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் லுக் ரோஞ்சி 88 ரன்கள் (13 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து முதல் இன்னிங்சை நிதானமாக தொடங்கிய இங்கிலாந்து அணி சிறந்த தொடக்கம் கண்டது. 70 ஓவர்கள் முடிந்திருந்த போது ஒரு விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்து இருந்தது. கன்னி சதத்தை நிறைவு செய்த ஆடம் லைத் 103 ரன்களுடனும், கேரி பேலன்ஸ் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கேப்டன் அலஸ்டயர் குக் 75 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

முன்னதாக குக் 33 ரன்கள் எடுத்த போது, இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்தார். 118 டெஸ்டில் 8,900 ரன்கள் எடுத்துள்ள முன்னாள் வீரர் கிரகாம் கூச்சே இதுவரை இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன்கள் குவித்தவராக திகழ்ந்தார். கிட்டதட்ட 22 ஆண்டு காலமாக அவர் தக்க வைத்திருந்த இச்சிறப்பை 30 வயதான அலஸ்டயர் குக் தட்டிப்பறித்துள்ளார். 114-வது டெஸ்டில் ஆடும் குக் 27 சதம் உள்பட 8,944 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த அளவில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர்களின் பட்டியலில் அவர் 13-வது இடம் வகிக்கிறார்.

SHARE