டோனி தலைமையில் அசத்தினேன்.. கண்டுகொள்ளாத தெரிவு குழு: நெஹ்ரா வருத்தம்

309
ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் அசத்திய ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 8வது தொடரில் சென்னை அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தனது பந்துவீச்சாள் எதிரணியை மிரட்டினார். இவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் நல்ல நிலையில் இருந்தும் இந்தியத் தெரிவுக்குழுவினர் தனது திறமையைக் கண்டு கொள்ளாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில், உலகக்கிண்ண கிரிக்கெட்டில் இந்திய அணியுடன் நான் செல்வேன் என்று பலரும் கூறினர். ஆனால் 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் கூட நான் இடம்பெறவில்லை.

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகும் கூட 10 நாட்களில் மக்கள் என்னை மறந்து விடுகின்றனர்.

2008-2011 காலக்கட்டங்களில் அதிக அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். உலக அரங்கில் ஒப்பிட்டால் கூட நான் டாப் 3 பவுலர்களில் ஒருவராகவே இருந்து வருகிறேன்.

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் நிறைய பவுலர்களை முயற்சி செய்கின்றனர். நானும் இந்த வடிவங்களில்தான் அதிகமாக விளையாடி வருகிறேன்.

20-25 பவுலர்களை முயற்சி செய்து பார்த்து விட்டனர். ஆனால் ஆஷிஷ் நெஹ்ரா அதில் இல்லை. நான் எங்கு தவறாக முடிந்தேன் என்று தெரியவில்லை.

நான் 2009, 2010, 2011ல் வீசிய அதே ஆஷிஷ் நெஹ்ரா தான். இன்றும் எனது பந்துவீச்சில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால் எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

யாரும் என்னிடமும் எதையும் கூறுவதும் இல்லை. நான் சில நடப்பு பவுலர்களுக்கு நிகராகவே பந்து வீசுகிறேன்

இந்திய தலைவர் டோனியின் தலைமையின் கீழ் சில கடினமான ஓவர்களை வீசியுள்ளேன். ஆனாலும் உறங்கச் செல்லும் போது இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதே என்னை வருத்தமுறச் செய்துள்ளது.

இந்திய அணிக்கு விளையாடும் அளவுக்கு நான் நல்ல முறையில் செயல்படுவதாகவே கருதுகிறேன். நான் இன்னமும் நல்ல முறையிலேயே வீசிவருகிறேன். திறமைக்கு வயது ஒரு காரணமாக அமைய முடியாது என்று கூறியுள்ளார்.

SHARE