வேகத்தில் மிரட்டிய அவுஸ்திரேலியா: 148 ஓட்டங்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி

346
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி டொமினிக்காவில் உள்ள ரோசியூ நகரில் நேற்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அவுஸ்திரேலிய அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சில் திணற ஆரம்பித்தது.

இதனால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 53.5 ஓவர்களிலே 148 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஷாய் ஹோப் அதிகபட்சமாக 36 ஓட்டங்களும், ஹோல்டர் 21 ஓட்டங்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலிய தரப்பில், ஜான்சன், ஹாசல்வுட் தலா 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், லயன், சுமித் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. மேற்கிந்திய தீவுகள் பதிலடியாக மிரட்டியது.

இதனால் தொடக்க வீரர்களான வார்னர் (8), மார்ஷ் (19) வந்த வேகத்தில் வெளியேறினர். அணித்தலைவர் கிளார்க்கும் (18) நிலைக்கவில்லை.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 85 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

ஆடம் வோகஸ் 20 ஓட்டங்களும், சுமித் 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். பந்துவீச்சில், டெய்லர், ஹோல்டர், தேவேந்திர பிஜூ ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

SHARE