பிறந்த நாள் பரிசாக கிடைத்த துப்பாக்கியால் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய 21 வயது வாலிபன் கைது

340
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பிரார்த்தனையில் ஈடுபடும் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்திற்குள் துப்பாக்கி சூடு நடத்தி 9 பேர் பலியாக காரணமானதாக சந்தேகிக்கப்படும், 21 வயதான வெள்ளையின நபரைக் கைது செய்துள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குறித்து, எவ்வித தகவலும் வெளிவராமல் இருந்ததால் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் ஒன்பது பேர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி சார்ல்ஸ்டன் நகர மேயர் முன்னிலையில், போலீஸ் தலைவர் க்ரெக் முல்லன் கூறுகையில், கறுப்பின மக்கள் மீதான வெறுப்பு காரணமாக இத்துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது 21 வயதுடைய அந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறிய முல்லன், காயமடைந்த இருவரில் ஒருவர் தெற்கு கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பலனளிக்காமல் பலியானதாக கூறினார். எனினும் இறந்தவர்கள் யார் யார் என்ற விவரத்தை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

இச்சம்பவத்தில் பாதிரியார் கிளமென்டா பிங்க்னி மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பலியானதாக அங்கு வசிக்கும் சிறுபான்மை சமூக தலைவரான டாட் ரூதர்போர்டு கூறினார்.

இந்நிலையில், சம்பவம் நடந்த தேவாலயத்திலிருந்து 200 மைல்கள் தொலைவில் உள்ள வடக்கு கரோலினாவில் இருக்கும் ஷெல்பி நகரில் வைத்து சந்தேகிக்கப்படும் அந்தக் குற்றவாளி கைது செய்யப்பட்டதாகவும், அவனது பெயர் டைலன் ஸ்டார் ரூஃப் என்றும், அவன் உபயோகித்த 45 கேலிபர் துப்பக்கி அவனது அப்பா இந்த வருடம் அவனுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கியதென்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE