பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வானது, ஈழத்தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய கறைபடிந்த அத்தியாயமாகும். இத்துயர நிகழ்வு தொடர்பாக சர்வதேச விசாரணை நடைபெறவுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கில் தமது உறவுகளை இழந்த தமிழ் மக்கள், காவு கொள்ளப்பட்ட தமது சொந்தங்களை தாம் விரும்பிய இடத்தில், விரும்பிய வகையில் நினைவு கூருவதற்கு அடிப்படை உரிமை உள்ள நிலையில் சிறீலங்கா அரசு பகிரங்கமாகவே அதை மறுத்துள்ளது.
மக்களை நினைவு கூருகின்ற நிகழ்வை பயங்கரவாத செயலென திரிபுபடுத்தி சித்திரித்து, இராணுவ மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்கள் பயங்கரவாதிகளை நினைவு கூரும் எவர் மீதும் பயங்கரவாத தடைச்சட்டம் பாயும் என்றும், முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவு கூருபவர்களை கைது செய்யும் படி பாதுகாப்பு அமைச்சும் அறிக்கை விடுத்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் அழித்தொழிக்கப்பட்டதை அவர்களது சொந்தங்கள் நினைவு கூருதல் என்பது எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை மனித உரிமையாகும்.
அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போதே, அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவசரகால சட்டம் இல்லாத இன்றைய நிலையில் அவரசர கால நிலைக்கும் மேலான, மோசமான அடக்குமுறைகள் இராணுவம், பொலிஸ், புலனாய்வு துறையால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
அரசின் இந்த உத்தரவு வருடாவருடம் நடைபெறும் கோவில் திருவிழாக்களை கூட தடைசெய்து விட்டுள்ளது. முற்கூட்டியே அறிவித்து ஏற்பாடு செய்யப்பட்ட பல பொது நிகழ்ச்சிகள் மிரட்டல்கள் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையில் இரத்தம் வழங்க சென்றவர்கள் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு இரண்டு நாட்களுக்கு ரத்தம் கொடுக்கவோ, எடுக்கவோ கூடாது என்றும் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தம் உறவுகளை நினைவு கூருவதற்கு அனுமதி பெறப்பட்ட மண்டபங்களின் உரிமையாளர்கள் கூட இராணுவ புலனாய்வாளர்களால் மிரட்டப்பட்டு அந்த மண்டபங்களின் அனுமதி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
என்றுமில்லாதவாறு இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை அனுஸ்டிப்பது தொடர்பாக வடக்கு மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும் அவல நிலையில், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட்டமைப்புக்கு என்று ஒரு தலைமை இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு மயான அமைதி காத்து கொண்டிருக்கின்றார்.
தமிழர் வரலாற்றில் இத்தகைய ஒரு முக்கிய நிகழ்வு தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழி காட்டுவதுடன், அரசின் சட்ட விரோதமான அறிவித்தல்கள், பொலிஸ், இராணுவம் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் நடவடிக்கைகளை அரசுடன் பேசியோ, நீதிமன்றத்தினூடாகவோ நிறுத்தியிருக்க வேண்டும்.
எவ்வித வழிகாட்டலும் இல்லாத நிலையில் சிவாஜிலிங்கம் போன்றோர் தனித்து செயல்படுவதும், தாம் விரும்பிய வகையில் எதையாவது செய்யலாமா? வேண்டாமா? என்று குழம்பித்தவிப்பதும், செய்ய முயற்சிப்பதுமாக மக்களை கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழப்பி, தப்புத்தாளம் போட்டு நிலைமையை மேலும் மேலும் சிக்கலாக்கி கொண்டிருக்கின்றனர்.
இது கூட்டமைப்புக்குள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத, ஒன்றுபட்ட செயல்பாடு இல்லாத அராஜக போக்கையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
இவற்றுக்கு காரணம், கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக இல்லாமல், எவரும் தலைவர்கள் போல் செயல்படலாம், தனித்து முடிவுகளை எடுக்கலாம், தம் நினைப்புக்கு, தாம் நினைத்தது எதனையும் செய்யலாம் எனும் நிலையில் கட்சியை வைத்திருப்பது தான்.
மே 18 ஒவ்வொரு வருடமும் வருகின்ற தமிழ் மக்களின் தேசிய துக்க நிகழ்வாகும். இது தொடர்பில் சம்பந்தர் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆற்றலுள்ள தலைமைக்கு வழி விட்டு ஒதுங்க வேண்டும் என்று மக்கள் கொதிப்புடன் கூறுகின்றனர்.