இந்தோனேசிய தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழரின் இரத்தக் கண்ணீரின் கதறல்தமிழ் உறவுகளே..! முள்ளிவாய்க்காலில் மடிந்து போன உறவுகளைத்தான் எம்மால் காப்பாற்ற முடியவில்லை… இந்த ஒன்பது உறவுகளையாவது காப்பாற்ற ஒன்றுபடுவோமாக…

352

 

கடந்த 28.03 2013 அன்று அறுபத்தி ஆறு பேருடன் தமிழகத்தில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஈழ உறவுகள், கடல் சீற்றம் காரணமாக இந்தோனேசியாவில் உள்ள ஈராமி தீவுக்குச் சென்று தஞ்சமடைந்தார்கள்.அங்கு “பென்குழு” என்ற இடத்தில் ஒரு மாத காலம் தங்கியிருந்த ஈழ உறவுகள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்டு இருபத்தியொரு பேர் ஜகார்த்தாவில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்கள். மீதமுள்ள நாற்பத்தைந்து பேரின் நிலமை இன்றுவரை என்னவென்று தெரியவில்லை!

இந்த உறவுகளில் சிலர் ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவார்கள். இதில் ரஞ்சித் என்பவருக்கு மூன்று துப்பாக்கி ரவைகள் உடலுக்குள் இருப்பதாலும்… இன்னுமொரு உறவான ரதீபன் என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தகடு பொருத்தப்பட்டு இருப்பதாலும் முறையற்ற சிகிச்சைகள் இல்லாததாலும் மோசமான வலிகளுடன், மிகவும் ஆபத்தான நிலையில் நாட்களை நகர்த்தி வருகின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட இருபத்தியொரு பேரில் குடும்பங்களாக இருந்த நான்கு குடும்பங்கள் விடுதலையாகி வெளியே அகதிகளாகவே இன்றுவரையும் வாழ்ந்து வருகின்றனர். மீதமுள்ள ஒன்பது பேரும் திருமணமாகாத இளைஞர்கள் என்பதால் தொடர்ந்தும் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஒன்பது பேரையும் ஐ.நா அனுமதித்தால்தான் விடுதலை செய்ய முடியும் என்று இந்தோனேசியா அரசும் மறுத்து விட்டது. இருந்தும், இந்த ஒன்பது உறவுகளும் ஐ.நா.வின் அகதிகளுக்கான உரிமை வழங்கப்பட்ட பின்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அகதிகளுக்கான அந்தஸ்து வழங்கப்பட்ட பின் அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் சிறையிலேயே அடைத்து வைத்திருப்பதென்பது ஐ.நா வின் மனித உரிமைகள் விதிகளுக்கு முரணானது!! இந்தோனேசியாவிலும் அகதிகள் தங்கி வாழ தடையேதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்பது ஈழ உறவுகளும் தங்களது விடுதலைக்காக பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தும் இந்தோனேசியா அரசு கண்டு கொண்டதாகத் தெரியவில்லை!

மேற்குறிப்பிட்ட இந்த உறவுகளின் விடுதலைக்காக இந்த ஒரு வருடமாக எந்தவித தமிழ் அமைப்புகளும் இதுவரை குரல் கொடுத்ததில்லை! வெறும் ஓட்டுக்கும், பெயருக்கும் இருக்கும் பல தமிழ் அமைப்புகள் இந்த அகதிகள் விடயத்தில் இதுவரையும் பகிரங்கமாகக் குரல் கொடுத்ததில்லை! இதேபோலதான் துபாயில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடயத்திலும் தமிழ் அமைப்புகள் இதுவரையும் குரல் கொடுத்தததுமில்லை! மாறாக தமிழகத்து உறவுகளும், புலம்பெயர் தமிழ் உறவுகளும் மற்றும் தமிழகத் தலைவர்களான திரு. வைகோ அவர்கள், திரு. பழ.நெடுமாறன் ஐயா அவர்கள், திரு. சீமான் அவர்கள், திரு. திருமுருகன் காந்தி அவர்கள் என அனைவரும் சேர்ந்து அடிக்கடி துபாய் அகதிகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இவர்கள் அனைவருக்கும் இந்தோனேசியாவில் சிறைப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் விடயம் பற்றி இதுவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை! காரணம், இந்த அகதிகள் பற்றிய செய்திகள் இதுவரையும் வந்ததில்லை! ஆனாலும், எம் ஈழ அமைப்புக்களுக்கு நன்றாகவே தெரியும் என்பது வேதனைக்குரிய விடயமாகும்!

ஈழம் சார்ந்த எந்த அமைப்புகளும் இந்த அகதிகள் விடயத்தில் இதுவரை எந்தவிதமான குரலும் கொடுத்ததில்லை! தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடம் துபாய் அகதிகள் உதவிகள் கோரியும் அவர்கள் அது பற்றி செவி சாய்த்ததாகத் தெரியவில்லை! ஆகவே கடந்த ஒரு வருடமாக சிறைக்குள் அடைக்கப்பட்டு எவ்வித உதவிகளுமின்றி.. கேட்க எந்த நாதியுமின்றி… மருத்துவ வசதிகளுமின்றி… இரத்தங்கள் வலிந்தோடும் உடல் காயங்களோடும்… உள்ளத்து வலிகளோடும்… தமக்கான விடுதலையை வேண்டி… தமக்காக குரல் கொடுத்து தமது விடுதலைக்கு உதவிடுமாறு புலம்பெயர் உறவுகளையும், தமிழக தொப்புள் கொடி உறவுகளையும், தமிழகத்து இனமானத் தலைவர்களையும் கண்ணீருடன் வேண்டி நிற்கின்றனர்.

குறிப்பாக ஆங்கில வடிவத்தில் துபாய் அகதிகளின் அவலங்களை வெளியிட்டு மனித உரிமைகள் அமைப்புகளூடாக அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் ஐ.நா விற்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற “வானவில்” பத்திரிகையின் சிங்கள மொழி பெயர்ப்பான “தேதுன்ன” பத்திரிகையின் ஆசிரியர் ரோகித்த வாஷண அபேவர்த்தன அவர்களையும் தமது விடுதலைக்கு உதவிடுமாறு கண்ணீர் மல்க வேண்டி நிற்கின்றனர்.அத்தோடு, துபாய் அகதிகள் விடயத்தில் தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் தமிழ் இளைய ஊடகங்களையும் கண்ணீரோடு வேண்டி நிற்கின்றனர்.

இந்தோனேசியா சிறையில் வாடும் ஈழ உறவுகளின் பெயரும், ஐ.நா.வின் பதிவிலக்கமும்:பார்த்திபன் 352-13C00275 2, ரதீபன் 352-13C00275 3, ரஞ்சித் 353-13C00211 4, பிரசன்னா 352-13C00267 5, ரோசன் டெனிஸ் 352-13C00266 6, அந்தோணி 352-13C00265 7, துளசிகர் 352-13C00270 8,சூரியன் 352-13C00277 9,கண்ணாதாஸ் 352-13C00269.

இனமான தமிழ் உறவுகளே..! முள்ளிவாய்க்காலில் மடிந்து போன உறவுகளைத்தான் எம்மால் காப்பாற்ற முடியவில்லை… இந்த ஒன்பது உறவுகளையாவது காப்பாற்ற ஒன்றுபடுவோமாக…indonesia-jail1indonesia-jail2indonesia-jail3

SHARE