மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொண்டச்சி பாசித்தென்றல் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுவரும் சிங்களக் குடும்பங்களுக்காக கட்டப்பட்டுவரும் வீடுகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவருடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினைச் சேர்ந்த தமிழ் மக்களின் வீடுகளை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் காடுகளுக்குள் அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாபதியின் நெருக்கத்துக்குரியவராக சொல்லப்படுகின்ற மன்னாருக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச அதிபர் M.Y.S. தேசப்பிரியவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் முழுமையான இராணுவ ஆளணியினரால் பாசித்தென்றல் கிராமத்தில் கொக்குப்படையான் தொடக்கம் ஆலம்வில் வரையான பகுதியில் 1218 சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதன் முதற் கட்டமாக ஐநூறு வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கென ஜனாதிபதி விசேட செயலணியினால் 560 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியார் எவரும் சென்று பார்வையிடக்கூட முடியாத நிலையில் முழுமையான இராணுவத்தினரே அனைத்து கட்டுமாண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்துக்கான வீதி, நீர் விநியோகம், வீட்டுத்திட்டம் உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவித்து அரசியல் செய்துவரும் அரசு தமிழ் மக்களை திட்டமிட்டு ஒதுக்கி அவர்களை அவல வாழ்வு வாழ்வதற்கான சூழலையே முன்னெடுத்துவருகின்றது என்பதற்கு உதாரணமாக முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியினை சுட்டிக்காட்டலாம்.
இதேவேளை குறித்த பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றத்தினை முழுமையாக முன்னெடுக்கும் பட்சத்தில் அங்கு குடியேறும் 4300 சிங்கள வாக்காளர்களை எதிர்கால அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தும் உள்நோக்கமும் உணரப்பட்டுள்ளது.
இவ்வாறான அடாவடித் தனமான நில ஆக்கிரமிப்பும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றமும் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை உடனடியாகக் கைவிட்டு தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து அவர்களும் சராசரி மனிதர்களாக வாழ்வதற்கான நடவடிக்கைகளையாவது முன்னெடுக்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும் என்றும் ஆனந்தன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.