இலங்கை அணிக்கு அதிர்ச்சி. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. (வீடியோ இணைப்பு)

363
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இதன் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலே மைதானத்தில் நடந்தது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா, பந்து வீச முடிவு செய்தார். அதன் படி, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 278 ஓட்டங்கள் எடுத்தது. இதில் கருணாரனே சதம் விளாசினார். இவர் 14 பவுண்டரி உட்பட 130 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில், யாசிர் ஷா 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இலங்கை பந்து வீச்சில் திணறியது. இதனால் 215 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் அசார் அலி (52), சர்பிராஸ் அகமது (78) அரைசதம் கடந்தனர். பந்துவீச்சில் பிரசாத், பிரதீப், கவுஷால் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.

முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 10 ஓட்டங்களிலும், சில்வா 3 ஓட்டங்களிலும், திரிமன்னே டக்-அவுட்டாகவும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் சிக்கலில் இருந்த இலங்கை அணியை தரங்கா, மேத்யூஸ் தங்களின் நிதானமான ஆட்டத்தால் நிலைநிறுத்தினர். தரங்கா (48) அரைசதத்தை தவறவிட்டார். சிறப்பாக விளையாடிய மேத்யூஸ் (122) சதம் அடித்தார். முபாரக் 35 ஓட்டங்களில் வெளியேறினார்.

சந்திமால் (67) தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். 2வது இன்னிங்சில் 313 ஓட்டங்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தானின் இம்ரான்கான் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு 377 ஓட்டங்கள் இலக்காக கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அகமது ஷேசாத் (0), அசார் அலி (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷான் மசூட், யூனிஸ்கான் ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பினர். தூண் போன்று நிலைத்து நின்று இருவரும் சதம் அடித்தனர்.

4வது நாள் ஆட்டநேர முடிவில் யூனிஸ்கான் (101), மசூட் (114) ஆகியோர் களத்தில் இருக்க பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் ஷான் மசூட் 125 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் யூனிஸ்கானுடன் இணைந்த அணித்தலைவர் மிஸ்பா பாகிஸ்தாண் அணியை வெற்றி பெற வைத்தார்.

மிஸ்பா 59 ஓட்டங்களுடனும், யூனிஸ்கான் 171 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

SHARE