அவுஸ்திரேலியா இமாலய வெற்றி: சொந்த மண்ணில் வீழ்ந்த இங்கிலாந்து

351
ஆஷஸ் தொடரின் 2 வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 405 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.இங்கிலாந்து, அஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 566/8 (சமன்), இங்கிலாந்து 312 ஓட்டங்கள் எடுத்தன.

மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 108 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரோஜர்ஸ் (44), வார்னர் (60) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலியாவின் கிறிஸ் ரோஜர்ஸ் 49 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மயக்கம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.

அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் (83) நம்பிக்கை தந்தார், அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்தார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 42வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த ஸ்மித், 43வது பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.

இவர், 49 பந்தில் 58 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மொயீன் அலி ‘சுழலில்’ போல்டானார். பின் களமிறங்கிய மிட்சல் மார்ஷ், மொயீன் பந்தில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசினார்.

இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 254 ஓட்டங்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் (32), மிட்சல் மார்ஷ் (27) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின் 509 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆடம் லித் (7), அணித்தலைவர் அலெஸ்டர் குக் (11) ஜோடி மோசமான தொடக்கம் தந்தது. கேரி பேலன்ஸ் (14), இயான் பெல் (11), பென் ஸ்டோக்ஸ் (0) ஏமாற்றினர்.

தேநீர் இடைவேளைக்கு பின் களமிறங்கிய இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் அவுஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர்.

ஜாஸ் பட்லர் (11), மொயீன் அலி (0), ஸ்டூவர்ட் பிராட் (25), ஜோ ரூட் (17) அடுத்தடுத்து ஆட்டமிழக்க அவுஸ்திரேலியாவின் வெற்றி உறுதியானது.

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 103 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. மார்க் வுட் (2) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவுஸ்திரேலியா சார்பில் ஜான்சன் 3, ஹேசல்வுட், லியான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் வென்றார்.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது டெஸ்ட் பர்மிங்காமில் வரும் யூலை 29 ஆம் திகதி தொடங்குகிறது.

SHARE