சூதாட்ட புகாரில் இருந்து விடுதலை: என் குழந்தைக்கு தலைகுனிவு ஏற்படாது- ஸ்ரீசாந்த்

337

2013–ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக பரபரப்பு புகார் கிளம்பியது.

இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் சூதாட்ட தரகர்களிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கிரிக்கெட் விளையாடவும், இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது.

இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டிலா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

விடுதலையான ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து ஸ்ரீசாந்த் கூறியதாவது:–

இப்போதுதான் மனதிற்கு நிம்மதியாக உள்ளது. என் மீது புகார் கூறப்பட்டதும், எனது தந்தை மிகவும் உடைந்து போனார். 2 முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடவுள் அருளால் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார்.

இப்போது நான் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தகவல் அறிந்து மகிழ்ச்சியில் உள்ளார். எனக்கு குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிறது. அந்த குழந்தையின் முன்பு எனக்கு ஏற்பட்ட தலைகுனிவு இந்த தீர்ப்பு மூலம் துடைக்கப்பட்டுள்ளது.

நான் குற்றவாளி இல்லை என கூறப்பட்டதன் மூலம் என் குழந்தைக்கு நல்ல தந்தை என்ற பெயரை பெற்றுக் கொடுத்துள்ளேன். அவள் வளர்ந்து வரும்போது, அவளது தந்தை ஒரு கிரிக்கெட் வீரர் என்று மட்டுமே தெரிய வேண்டும்.

கிரிக்கெட் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் முறைப்படியான பயிற்சியை தொடங்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்

SHARE