தாய்லாந்து கோவிலில் குண்டுவெடிப்பு: குண்டு வைத்தவர் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது

308
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மதேவன் இந்து கோவிலில் நேற்று முன்தினம் பயங்கர குண்டு வெடித்து சிதறியது. இதில் பலர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை தாய்லாந்து போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு குண்டு வைத்தவரின் உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் யூச்சா உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;-

‘தாய்லாந்து மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும். குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கியமான தடயம் கிடைத்து உள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி உள்ளது. அவர் மஞ்சள் நிற ‘டி-சர்ட்’ அணிந்து உள்ளார். ஒரு பை வைத்து உள்ளார். அதில் வெடிகுண்டுகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

கோவிலுக்குள் நுழைந்த அவர், அங்கிருந்த சாமி சிலைகளை படம் எடுத்து உள்ளார். சந்தேகப்படும் வாலிபரின் முடி கருமை நிறத்தில் உள்ளது. கையில் பட்டைகள் அணிந்து இருந்தார். குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பாக கோவிலில் இருந்து அவர் வெளியேறி விட்டார். பாங்காக்கில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்தது. சந்தேகப்படும் வாலிபர் முன்னதாக மாலை 6.40 மணிக்கு கோவிலை விட்டு வெளியேறி விட்டார். அந்த வாலிபரை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

SHARE