பாக். அரசின் பிடிவாதத்தால் இந்தியா – பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை ரத்து

339
பாகிஸ்தானுடன் தீவிரவாதம் தவிர்த்து வேறு எதைப்பற்றியும் பேச முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்த நிலையில் பாகிஸ்தானோ, காஷ்மீர் பிரச்சனையை விலக்கிவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று அறிவித்து விட்டதால் இன்று டெல்லியில் நடைபெறவிருந்த இரு நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குவதாக இருந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சம் தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற நிலைப்பாடுதான் என்ற நிலையில் காஷ்மீர் பிரச்சனையும் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டும் என்பதில் பாகிஸ்தான் பிடிவாதம் காட்டியது. அத்துடன், பேச்சுவார்த்தைக்காக டெல்லி வரும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.

இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதரகத்துக்கு இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், பிரிவினைவாதிகளை சந்தித்து பேசுவதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று கருதும் பாகிஸ்தான், இதற்கு முன்பு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதெல்லாம் காஷ்மீர் பிரிவினைவாதிகளை தாங்கள் சந்தித்து பேசியதாக சப்பைக்கட்டு கட்டியது.

இதற்கிடையே, பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் விடுத்த அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் தூதரகத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லி வந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சபீர் ஷா, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை பாதுகாப்பு படையினர் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று வீட்டுக்காவலில் வைத்தனர். அவருடன் டெல்லி வந்த முகமது அப்துல்லா தாரி, ஜமீர் அகமது ஷேக் ஆகிய பிரிவினைவாத தலைவர்களும் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதேபோல் காஷ்மீரில் இருந்து வந்த ஹூரியத் மாநாடு கட்சியின் தலைவர் பிலால் லோனும் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்

இந்த நிலையில், சர்தாஜ் அஜிஸ் நேற்று மதியம் இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

என்னை பொருத்தவரை டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருக்கிறேன். ரஷியாவின் உபா நகரில் இரு நாடுகளின் தலைவர்கள் (பிரதமர் மோடி–பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்) இடையே ஏற்பட்ட புரிந்து கொள்ளலை கவனத்தில் கொண்டு இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளிடையே நிலுவையில் உள்ள காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் இடம்பெற வேண்டும்.

காஷ்மீரில் ஹூரியத் தலைவர்களை கைது செய்வது கவலை அளிக்கிறது. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். ஒரே ரத்த உறவைக் கொண்ட காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கக்கூடாது என்று இந்தியா கூறுவது சரி அல்ல.

இவ்வாறு சர்தாஜ் அஜிஸ் கூறியிருந்தார்.

சர்தாஜ் அஜிஸ் பேட்டி அளித்த பின்பு நேற்று மாலை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடையே உபா நகரில் நடந்த சந்திப்பின்போது விரிவானதொரு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்சனையை சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

உபா நகரில் பிரதமர் மோடி, நவாஸ் ஷெரீப்பிடம் முதலில் தீவிரவாதம் குறித்து பேசுவோம் என்ற முடிவைத்தான் தெரிவித்தார். தற்போது, பாகிஸ்தான் அனுப்பியுள்ள நிகழ்ச்சி நிரலில் முழுமையான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய அத்தனை அம்சங்களும் காணப்படுகின்றன.

சிம்லா ஒப்பந்தத்தின்படி, காஷ்மீர் பிரிவினைவாதிகளை பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் சேர்க்க முடியாது. பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் தீவிரவாதம் தவிர வேறு எதையும் பேச முடியாது.

பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், இந்தியாவுக்கு வருவதை வரவேற்கிறோம். அவர் வேறு எந்த முன் நிபந்தனைகளையும் இந்தியாவிடம் வைக்கக்கூடாது. சிம்லா உடன்படிக்கை மற்றும் உபா கூட்டறிக்கையின்படி மட்டுமே பேச்சுவார்த்தை அமையவேண்டும். இதை ஏற்றுக்கொண்டால் அவர் இந்தியா வரலாம். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை பாகிஸ்தான் ஏற்கவில்லை என்றால் பேச்சுவார்த்தை கிடையாது.

இந்தியா–பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின்போது மூன்றாவது நபர் எப்போதும் இருக்கக்கூடாது. எனவே ஹூரியத் பிரிவினைவாத தலைவர்களை இதில், 3–வது நபராக சேர்க்க முடியாது.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று லக்னோ நகரில் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான சந்திப்பின்போது தீவிரவாதம் தவிர வேறு எது பற்றியும் பேசக்கூடாது என்று பாகிஸ்தானிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம்’’ என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்தியா விதிக்கும் முன்நிபந்தனைகளை ஏற்க முடியாது என்பதால் இரு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

SHARE