சட்டவிரோதமாக பணியில் இருக்கும் வெளிநாட்டினர் சிறையில் அடைக்கப்படுவார்கள்’: பிரித்தானிய அரசு அதிரடி அறிவிப்பு

318
பிரித்தானிய நாட்டில் சட்டவிரோதமாக பணியில் இருக்கும் வெளிநாட்டினர்களுக்கு தகுந்த அபராதம் விதிப்பதுடன் அவர்களை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பிரித்தானிய நாட்டில் சட்டவிரோதமாக பணி செய்து வரும் வெளிநாட்டினர்களை தடுக்கும் விதத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதில், அடுத்த அதிரடி திட்டமாக வேல்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து நாட்டில் சட்டவிரோதமாக பணிசெய்து வரும் வெளிநாட்டினர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒரு புதிய குடிவரவு மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

இது தொடர்பாக பிரித்தானியாவின் குடியமர்வு துறை அமைச்சரான ஜேம்ஸ் புரோகென்ஷிர் வெளியிட்ட அறிக்கையில், உரிய ஆவணங்கள் மற்றும் சட்டரீதியான அனுமதி இல்லாமல் பணி செய்து வரும் வெளிநாட்டினர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சட்டவிரோதமாக ஈட்டிய வருமானத்தை அபகறிப்பதுடன் அவர்களுக்கு அதிகப்படியான அபராதமும் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உணவு விடுதிகளில் பணிபுரிபவர்கள், வாகன ஓட்டுனர்கள், உரிய உரிமம் இல்லாமல் பணியமர்த்தப்பட்ட நபர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டினர்களும் சட்டவிரோதமாக பணியில் இருப்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கப்படும்.

இது மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக நபர்களை பணியில் அமர்த்தும் நிறுவன உரிமையாளர்களுக்கும் அதிகப்படியான 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என குடியமர்வு அமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பணி செய்வதற்கு பிரித்தானியா ஒரு உகந்த நாடாக இருந்தாலும் கூட, இங்கு சட்டவிரோதமாக பணியமர்த்தப்படுவர்கள் வாடகை வீடு, வங்கி கணக்கு, வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளை பெற அனுமதிக்க முடியாது என ஜேம்ஸ் புரோகென்ஷிர் தெரிவித்துள்ளார்.

SHARE