கைகொடுத்த கோஹ்லியின் திட்டம்: ஆதரவு தெரிவித்த சமிந்தா வாஸ்

328
புதிய அணித்தலைவர் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி நல்ல முறையில் உருவாகி வருவதாக இலங்கை வீரர் சமிந்தா வாஸ் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் விராட் கோஹ்லி புதிய அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணித்தலைவராக களமிறங்கிய கோஹ்லி, 5 பந்துவீச்சாளர்கள் என்ற புதிய திட்டத்தோடு விளையாடினார்.

இந்த புதிய திட்டம் முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக கைகொடுத்தது. ஆனால் துடுப்பாட்டத்தில் சொதப்பி அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

இதனால் கோஹ்லியின் 5 பந்துவீச்சாளர்கள் கோட்பாட்டுக்கு விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் நன்றாக செயல்பட்ட இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

இந்நிலையில் கோஹ்லியின், ஐந்து பந்து வீச்சாளர் கோட்பாட்டுக்கு இலங்கையின் சமிந்தா வாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி நல்ல முறையில் உருவாகி வருகிறது.

உலகத்தில் அனைத்து நல்ல அணிகளும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகின்றன. இந்திய அணி கொஞ்சம் ஆக்‌ரோஷமாக விளையாடுவதை நான் விரும்புகிறேன். கிரிக்கெட்டுக்கு அது நல்லது தான்.

மேலும், காலேயில் கைவிட்டுப் போன வெற்றியை இந்திய அணி 2வது டெஸ்ட்டில் கைப்பற்றியது. இலங்கை மீண்டும் வெற்றி பெற சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.

SHARE