22 ஆண்டுகளாக தொடரும் சோகம்: இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

336
இந்தியா– இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை தொடங்குகிறது.கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 63 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற வேண்டிய போட்டியில் கோட்டை விட்டதால் இந்தியாவுக்கு ஏமாற்றத்தில் முடிந்தது.

கொழும்பில் நடந்த 2வது டெஸ்டில் சில மாற்றங்களை செய்த இந்தியா 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1–1 என்ற கணக்கில் உள்ளது.

இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கொழும்பில் நடக்கிறது. இதில் இரு அணிகளும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை கோஹ்லி தலைமையில் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அதே போல் கோஹ்லியின் 5 பந்துவீச்சாளர்கள் கொள்கை அவருக்கு சிறப்பாக கைகொடுக்கிறது.

இந்திய அணியில் இடம் பெற்று இருந்த தமிழக வீரர் முரளிவிஜய், விக்கெட் கீப்பர் விர்த்திமான் சஹா ஆகியோர் நாடு திரும்பி உள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக கருண்நாயர், நாமன் ஒஜா இடம் பெற்றுள்ளனர். இருவரும் இதுவரை டெஸ்டில் விளையாடியது கிடையாது.

கடந்த 2 டெஸ்டிலும் வாய்ப்பு கிடைக்காத புஜாராவுக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அவர் ராகுலுடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடுவார். விர்த்திமான் இடத்தில் நாமன் ஒஜா விளையாடுவார்.

துடுப்பாட்டத்தில் ராகுல், ரஹானே, கோஹ்லி, ரோஹித் ஆகியோர் சிறப்பாக விளையாடுகின்றனர். பந்துவீச்சில் அஸ்வின் அசத்துகிறார். மிஸ்ராவும் சுழலில் மிரட்டுகிறார்.

இந்திய அணி இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி 22 ஆண்டுகள் ஆகிறது.

கடைசியாக அசாருதீன் தலைமையிலான அணி 1993ம் ஆண்டு 1–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதனால் இந்த நீண்ட வருட சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆவலுடன் உள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரை உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்காரா ஓய்வு பெற்றதால் அந்த அணி சற்று பலவீனமாக இருக்கிறது.

தவிர, துடுப்பாட்டத்தில் மேத்யூஸ், சந்திமால், திரிமன்னே நல்ல நிலையில் இருக்கின்றனர். தொடக்க வீரர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் நல்ல ஓட்டங்களை இலங்கை அணியால் குவிக்க முடியும்.

பந்துவீச்சில் ஹேராத், பிரசாத், தரிந்து கவுஷால், மேத்யூஸ் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.

இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை நடக்கும் கடைசி போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

SHARE