இங்கிலாந்து அணிக்கு பதிலடி: முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா எளிதான வெற்றி

296
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது.இதில் சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி சுமித் தலைமையிலும், இங்கிலாந்து அணி மோர்கன் தலைமையிலும் களமிறங்கியது.நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக பர்ன்ஸ் (44), வார்னர் (59) களமிறங்கி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

சுமித் (44), மேத்யூ வேட்( 71) அதிரடி காட்டி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். இதனால் அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 305 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ரஷித் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (67), அலெக்ஸ் ஹேல்ஸ் (22) நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

இருப்பினும் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்களை இங்கிலாந்து இழந்ததால் 246 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அவுஸ்திரேலியா 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் கவுல்டர்-நைல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 3-2 என கைப்பற்றியது.

அதன்பின் ஒரேயொரு டி20 போட்டி நடைபெற்றது. அதிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

தற்போது முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று டி20 தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது அவுஸ்திரேலியா.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

SHARE