குழந்தைகள் உட்பட 34 பேர் நீரில் மூழ்கி விபத்து: தொடரும் அகதிகள் உயிரிழப்பு

292
துருக்கியில் இருந்து கிரேக்கம் நோக்கி படகில் பயணம் செய்த குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிரேக்கத்தின் கிழக்கு தீவுகள் நோக்கி ரப்பர் படகில் பயணமான 34 பேர் துருக்கி அருகே 5 கி.மீ. தொலைவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானார்கள்.

இதில் 4 குழந்தைகள், 6 சிறுவர்கள் ம்ற்றும் 5 சிறுமிகள் என 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான சிரியா அகதிகள் இந்த ஆண்டு மட்டும் துருக்கியில் இருந்து காற்றடைக்கும் ரப்பர் படகுகளில் கிரேக்கத்தின் கிழக்கு தீவுகள் நோக்கி பயணமாகியுள்ளனர்.

இதில் ஆயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கி இறந்தும், பெரும்பாலானோர் லிபியாவின் பரந்த கடற்பகுதியை கடக்க முயன்று கடலில் தத்தளிப்பதாக கடலோரக் காவல்படையினர் தெரிவிக்கின்றனர்.

கடல் மார்கமாக இந்த ஆண்டு மட்டும் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களில் மட்டும் Lesbos பகுதிக்கு 20 ஆயிரம் சிரியா அகதிகள் வந்துள்ளதாகவும், பெரும்பாலானோர் ரப்பர் படகுகளையே பயன்படுத்தி வருவதாகவும் கடலோரக் காவல்படையினர் தெரிவிக்கின்றனர்.

துருக்கி கடற்கரையில் இருந்து அயலான் குர்தி என்ற சிரியா அகதி சிறுவனின் உடல் கண்டெடுத்தது உலகமெங்கும் பெரும் அதிர்வை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE