எடுபடுமா தென் ஆப்ரிக்க ‘வேகம்’

331

சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் தென் ஆப்ரிக்க ‘வேகங்கள்’ சாதிப்பார்கள் என குளூஸ்னர் நம்பிக்கை தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்க  அணியின் முன்னாள் வீரர் லான்ஸ் குளூஸ்னர், 44. கடந்த 1996ல் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்டில் அறிமுகமான இவர், 2வது இன்னிங்சில் 8 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார். அடுத்து நடக்கவுள்ள இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் குறித்து குளூஸ்னர் அளித்த பேட்டி:

* இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு எப்படிபட்ட தென் ஆப்ரிக்க அணியை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியாவுக்கு எதிரான தொடர் நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். எனவே முன்னதாக இந்திய மண்ணில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்களுடன், திறமையான இளம் வீரர்கள் அடங்கிய தென் ஆப்ரிக்க அணி தேர்வு செய்யப்பட வேண்டும்.

* இந்திய ஆடுகளத்தில் தென் ஆப்ரிக்க ‘வேகங்கள்’ சாதிப்பார்களா?

தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது. ஸ்டைன், மார்னே மார்கல், பிலாண்டர் போன்றவர்கள் எத்தகைய சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இந்திய மண்ணில் விளையாடிய அனுபவம் மார்னே மார்கல், ஸ்டைனுக்கு அதிகம் உண்டு. இந்திய ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பது உண்மைதான். இருப்பினும் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு வேகப்பந்துவீச்சு நிச்சயம் கைகொடுக்கும்.

* கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை எப்படி சமாளிக்க போகிறீர்கள்?

சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோஹ்லி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார். இவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பதை மறுக்க முடியாது. இவரது தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள தென் ஆப்ரிக்க அணி நிர்வாகம் சிறப்பு திட்டம் வைத்திருக்கும் என நம்புகிறேன்.

* இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு எப்படி உள்ளது?

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்கள் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் நெருக்கடி கொடுப்பார்கள். அதேவேளையில் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சு சிறந்த அனுபவம் பெற்றுள்ளது.

* தற்போதுள்ள வீரர்களில் சிறந்த ‘ஆல்–ரவுண்டராக’ யாரை கூறுவீர்கள்?

ஒவ்வொரு அணியிலும் ‘ஆல்–ரவுண்டர்களின்’ பங்கு முக்கியமானது. தென் ஆப்ரிக்க அணியில் காலிஸ், போலக் போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சாதிப்பவர்களும் ‘ஆல்–ரவுண்டர்கள்’ தான். அந்த வகையில் இந்தியாவின் தோனி சிறந்த ‘ஆல்–ரவுண்டராக’ திகழ்கிறார்.

SHARE