தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு ஜடேஜா தேர்வு செய்யப்படாதது ஏன்?

331

இந்தியாவில் நெடுந்தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஆச்சரியமளித்திருக்கலாம்.

குறிப்பாக ஒருநாள், டி20 அணித் தலைவர் தோனிக்கு நெருக்கமானவர் என்று ஜடேஜா கருதப்பட்டு வரும் நிலையில் இரண்டு அணிகளிலும் அவர் இடம்பெறாதது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டாலும், ஜடேஜாவின் ஆட்டம் அவரது தேர்வுக்கு எதிராக அமைந்தது என்றே கூற வேண்டும்.

குர்கீரத் சிங் மான் என்ற ஆல்ரவுண்டர் மற்றும் கர்நாடக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டது வரவேற்கத் தக்கது என்றாலும், ஓய்ந்து போன ஹர்பஜன் சிங் டி20 அணியில் தேர்வு செய்யப்பட, அதிலிருந்தும் ஜடேஜா கழற்றி விடப்பட்டது வியப்புக்குரியதாக தெரிந்தாலும், எந்த ஒரு வீரரும் அணியில் தனது இடத்தை உத்திரவாதமாக நினைத்து விடலாகாது என்று பாடம் கற்பிக்கவும் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.டெஸ்ட் அணியில் ஜடேஜா விளையாடுவது கடினம், அவர் அதன் தேவைகளுக்கேற்ப தனது ஆட்டத்தை இன்னும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் அவர் இடம்பெறாது போனது, அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

பேட்டிங்கில் குறிப்பிடத்தகுந்த அளவில் ஆடவில்லை:

கேப்டன் தோனி ஆயிரம் முறை 7-ம் நிலையில் களமிறங்கும் ஜடேஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதாவது அந்த டவுனில் இறங்குபவர்களுக்கு ஒரு இரண்டக நிலை ஏற்படும் என்று. விக்கெட்டுகள் விழும் சமயத்தில் இறங்கினால் நின்று ஆடி நிலை நிறுத்த வேண்டும் அப்போது அவர் தனது ஸ்ட்ரோக் பிளேயை கட்டுப்படுத்தி ஆட வேண்டும், இதனால் ரன் விகிதம் பாதிப்படைந்தது என்ற விமர்சனம் எழும் என்றும், நல்ல நிலையில் களமிறங்கினால் அவருக்கு கிடைக்கப்போவது 15 அல்லது 20 பந்துகள்தான் அதில் ஒருவர் பெரிய அளவில் என்ன செய்து விட முடியும்? என்று தோனி ஜடேஜாவுக்காக பரிவு காட்டிய தருணங்கள் ஏராளம்.

ஆனால் அவரோ 7-ம் நிலையில் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸை கூட இதுவரை ஆடியதில்லை என்பதே வருத்தத்துக்குரிய உண்மை. 121 ஒருநாள் போட்டிகளில் 1804 ரன்களை எடுத்துள்ளார், சராசரியும் அவர் இறங்கும் டவுனுக்கு 32 என்று உள்ளது. ஆனால் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் அவரால் சீராக விளையாட முடிவதில்லை. அவரிடம் ஒரு நல்ல ஆட்டத்தை, திருப்பு முனை ஆட்டத்தை எதிர்பார்த்த தருணங்களிலெல்லாம் அவர் ஏமாற்றமேயளித்துள்ளார்.

செப்டம்பர் 5, 2014-ல் லீட்ஸ் மைதானத்தில் ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக 87 ரன்களை எடுத்தார். அதுதான் அவரது கடைசி ஒருநாள் அரைசதம். அதன் பிறகு மே.இ.தீவுகள், இலங்கைக்கு எதிரான 4 போட்டிகளில் அவரது ரன் எண்ணிக்கை, 33, 6, 2, 1. இது இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் எடுத்த ஸ்கோர் விவரம். அதன் பிறகு அவரது ஸ்கோர் விவரம்: 5, 3, 2, 13, 23 நாட் அவுட், 16, 32, 19. இந்த ஸ்கோரும் அவரது தேர்வுக்கு எதிராக செயல் பட்டுள்ளது.

பந்துவீச்சு: தேவையான தருணத்தில் விக்கெட்டுகள் எடுக்க முடியாத நிலை

எந்த பிட்சாக இருந்தாலும் ஒரு ஸ்பின்னர் பந்தை நன்றாக தூக்கி வீசும்போதுதான் அது பிட்ச் ஆகும் இடம் குறித்த சந்தேகங்களை பேட்ஸ்மென்களிடத்தில் ஏற்படுத்த முடியும், ஆனால் இவரோ பந்தை பிளாட்டாக வீசிவந்தார். ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. நடுவருக்கும் ஸ்டம்புகளுக்கும் இடையே வந்து டயக்னல் முறையில் வீசி கடினமான கோணங்களை ஏற்படுத்தலாம், அல்லது ஓவர் த விக்கெட்டிலேயே டைட்டாக பீல்ட் அமைத்து வீசலாம், ரவுண்ட் த விக்கெட்டை சாதுரியமாக பயன்படுத்தலாம். ஆனால் அவர் இதையெல்லாம் செய்யவில்லை.

இவரது பந்துகளை பேட்ஸ்மென்கள் எளிதில் கணித்து வந்தனர். அதனால் விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பே குறையத் தொடங்கின. 30 ஜனவரி 2015-ல் தொடங்கி அவர் ஒருநாள் போட்டிகளில் கடைசியில் டாக்காவில் 21, ஜூன், 2015 வரை 90 ஓவர்களை வீசியுள்ளார் இதில் கிட்டத்தட்ட 500 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.அதாவது ஓவருக்கு 5 ரன்களுக்கும் மேல் சராசரியாக வழங்கி வந்துள்ளார். ஆனால் வீழ்த்திய விக்கெட்டுகளோ 10 என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 10 ஓவர்களில் 71 ரன்களை விட்டுக் கொடுத்ததையும் நாம் மறக்கமுடியாது. சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகே அவரது பவுலிங், பேட்டிங் பங்களிப்பு கூறிக்கொள்ளும்படியாக அமையவில்லை.

கடைசியாக 2015-ம் ஆண்டு அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய போது அவரது சராசரி 49.50.

எனவே அவரது வீழ்ச்சிக்கு அவரது உழைப்பின்மையே காரணம். அணியில் தனது இடத்தை உத்திரவாதமாக எடுத்துக் கொண்டு கொஞ்சம் அலட்சியம் காட்டியதாகவே நமக்கு தெரிகிறது. பீல்டிங்கில் நன்றாக திறன் காட்டினார், ஆனாலும் டெஸ்ட் போட்டியில் பங்கஜ் சிங் பந்தில் அலிஸ்டர் குக்குக்கு விட்ட கேட்ச் மிகவும் மோசமானது, பங்கஜ் சிங் போன்ற ஒரு கடின உழைப்பு பவுலரை கிரிக்கெட்டிலிருந்து அகற்றிய டிராப் கேட்ச் அது என்றால் மிகையாகாது.

உலகக்கோப்பை டி20-க்குள் ஜடேஜா தனது இழந்த இந்திய அணி இடத்தை மீட்டெடுக்க வாய்ப்பில்லை என்றே இப்போதைக்கு தெரிகிறது.

இவரது வீழ்ச்சிக்கு ஓரளவுக்கு அவரும், தோனியும், பயிற்சியாளர்களுமே பொறுப்பு.

SHARE