மதருமை இளைஞர்களே! இந்தியப் பிரதமர் மோடி ஏன் அழுதார்? சிந்தியுங்கள்

308
எமதருமை இளைஞர்களே!  எங்கள் இளைஞர்கள் சிலரின் நடவடிக்கைகள் கண்டு தமிழ் அன்னை ஆற்றாது அழுகிறாள்.

தமிழினம் வாழ வேண்டும் என்பதுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ஈழத்தமிழினத்தில் இளைஞர்கள் மிகவும் கட்டுப்பாடானவர்கள் என்று புகழ் பெற்றவர்கள்.

விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு மிகவும் கட்டுப்பாடானது. அவர்களின் நிர்வாகத்தை மற்றவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிங்களத் தலைவர்களே கூறும் அளவில் எங்களிடம் ஒழுங்கான-கட்டுப்பாடான வாழ்வியல் முறைமை இருந்தது.

ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து, கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் நாம் எங்கே செல்கிறோம் என்ற ஏக்கமான விடயங்களே பேசுபடு பொருளாகியுள்ளன.

இத்தகைய நிலைமை அனைத்தும் எங்கள் தாயக மண்ணில் நாளுக்கு நாள் நடக்கும் நிட்டூரங்களால் ஏற்பட்டவை.

அன்புக்குரிய தமிழ் இளைஞர்களே!  நாங்கள் வாழவேண்டும். எங்கள் இனத்தைக் கருவறுத்தவர்கள் பார்த்துப் பிரமிக்கும் அளவில் எங்களின் வாழ்வும் வளமும் தாயகப் பற்றும் உச்சமடைய வேண்டும்.

கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், சூழலியல் எனப் பல்பரிமாணங்களில் எங்களின் தடங்கள் பதிவது மிகவும் அவசியமானது.

தமிழர்களை அடக்கவேண்டும் என்ற உணர்வு சிங்களப் பேரினவாதிகளிடம் ஏற்படுவதற்குக் காரணம் தமிழர்களின் கல்வி அறிவும், கடும் முயற்சியும் பொருளாதார முன்னேற்றமும் ஆகும்.

இன்று நாங்கள் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டுள்ளோம். எங்களை வீழ்த்துவதில் சர்வதேசத்தின் பேராதிக்கங்களும் துணை புரிந்தன.

எனவே நாங்கள் வீழ்ந்தவர்கள் அல்ல; வீழ்த்தப்பட்டவர்கள். எனவே மீளவும் எழுந்து நிற்பது எங்கள் மண்ணில் நடந்த தியாகத்துக்கு நாம் செய்கின்ற மரியாதையாகும்.

ஒரு கவிஞன் சொன்னான்; பத்தாவது தடவை வீழ்ந்தவனைப் பார்த்து பூமித்தாய் சொல்லுகிறாள் மகனே! நீ ஒன்பது தடவைகள் எழுந்து நின்றவன் அஞ்சாதே என்று.

ஆம் சகோதரர்களே! எங்கள் இனத்தை போதைவஸ்துக்களும் மதுப்பாவனைகளும் குழுச் சண்டைகளும் நாசம் செய்து விடலாகாது.

உங்களைப் பற்றி நீங்களே அறியுங்கள். உங்களால் முடியும் என்று நம்புங்கள்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்று, அமெரிக்க பேஸ்புக் நிறுவனத்தில் ஒரு சந்திப்பை நடத்தினார்.

அந்தச் சந்திப்பில் தன் தாயின் தியாகங்களைக் கூறினார்.

என் தாய் எங்களை வளர்ப்பதற்காக அயல் வீடுகளுக்குச் சென்று அவர்கள் கூறுகின்ற வேலைகளைச் செய்தார் இப்படிக் கூறிய போது பிரதமர் மோடி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

என் தாய் மட்டுமல்ல, இந்தியாவில் என் தாய் போல ஏகப்பட்ட தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக தியாகம் செய்துள்ளனர் என்றார்.

அதுமட்டுமல்ல புகையிரத வண்டியில் தேநீர் விற்றவன் நான். அன்று புகையிரத வண்டியில் தேநீர் விற்ற இந்த மோடிதான் இன்று இந்தியாவின் பிரதமர் என்று அவர் கூறியதை எங்கள் இளைஞர்கள் ஒருகணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிரதமர் மோடி விட்ட கண்ணீர் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்தால் போதும், எங்கள் தாய்மார்களின் தியாகங்களையும் நாங்கள் புரிந்து கொள்ள முடியும்.

அன்பு இளைஞர்களே! உங்களால்தான் தமிழ் அன்னை வாழ முடியும் என்பதால் உங்கள் உயர்ச்சி தான் எங்கள் அனைவரினதும் எழுச்சியாகும்.

SHARE