துருக்கி வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த விவகாரம்: ரஷ்யாவுக்கு நேட்டோ நாடுகள் கடும் எச்சரிக்கை

557
சிரியாவில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா திடீரென துருக்கி வான் எல்லையில் நுழைந்ததற்கு நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டுவரும் ரஷ்யா கடந்த ஐந்து நாட்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய நிலைகளை அழித்துள்ளதாக கூறியுள்ளது.

அதேவேளையில், அவர்கள் ஐ. எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபடாமல் சிரிய ஐனாதிபதி ஆசாத்திற்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகின்றது.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று திடீரென துருக்கி வான் எல்லையில் நுழைந்து பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.

இதையடுத்து துருக்கி ரஷ்யாவின் தாக்குதலுக்கு இடையூறு செய்ய தனது எப் 16 ரக விமானங்களை அனுப்பி வைத்தது.

மோசமான வானிலை காரணமாகவே துருக்கியின் வான் எல்லையில் நுழைந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்தது.

எனினும் ரஷ்யாவின் செயலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல் மீண்டும் நடந்தால் ரஷ்யா பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு ஜனாதிபதி கூறுகையில், யாராக இருந்தாலும் எங்கள் கொள்கை ஒன்றுதான் அதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் நேட்டோ உறுப்பினர்களும் ரஷ்யாவின் செயலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நேட்டோ விடுத்துள்ள அறிக்கையில், ரஷ்யா இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும், இல்லயென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும் அப்பாவி பொது மக்கள் மற்றும் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

SHARE