அடுத்தடுத்து அடி கொடுத்த பாகிஸ்தான், இந்தியா.. சொந்த மண்ணில் காத்திருக்கும் அடுத்த சவால்: சொல்கிறார் மேத்யூஸ்

321

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதே தனது இலக்கு என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதை முதல் இலக்காக வைத்திருப்பதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூஸ், “பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், இந்த தொடரில் புதிய யுக்திகளுடன் களமிறங்கவுள்ளோம்.

துடுப்பாட்டத்தில் ஏற்பட்ட மந்தமான நிலையை மாற்ற சில பயிற்சிகளை எடுத்துள்ளோம். சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கவுஷாலின் பந்து வீச்சு முறையற்ற முறையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இருப்பினும் அவருக்கு ஓப்-ஃபிரேக் பந்து வீச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அவரை அணியில் இணைத்துக் கொள்ள ஆலோசிக்கப்படும்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் இல்லாத நிலையிலும், அந்த அணி இளம் வீரர்களால் வலுவான நிலையில் இருக்கிறது. இதனால் கடுமையான சவால் காத்திருக்கிறது.

முன்னாள் வீரர்களான ஜெயவர்த்தனே, சங்கக்காரா இல்லாமல் களமிறங்கவுள்ளோம். புதிய சவாலாக இருந்தாலும் சிறப்பாக விளையாட ஆவலாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE