கட்டாக்கில் ரகளை: ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்

314

கட்டாக் மைதானத்தில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் நிச்சயம் கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லதல்ல என்று இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மோசமான விளையாடி தொடரை இழந்தது.

இதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் வீசி எறிந்து ரகளை செய்தனர்.

இந்த சம்பவத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது. இந்த சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “கட்டாக் மைதானத்தில் நடந்த சம்பவம் கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லதல்ல.

நாம் கிரிக்கெட் மீது மிகுந்த நேசம் கொண்டிருக்கிறோம். இதில் ஏமாற்றம் அடையும் போது வெறுப்புக்கு உள்ளாகிறோம். உங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வழி இதுவல்ல.

இதற்கு முன்பும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏமாற்றத்தை இதைவிட சிறந்த வழியில் கையாள வேண்டும்.

கட்டாக் சம்பவம் குறித்து ரசிகர்கள் அனைவரும் சிந்தித்து பார்த்து, முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மைதானத்திற்குள் ரசிகர்களை தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்ல அனுமதித்தது ஏன்? என்று கேள்வி விடுத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், இது குறித்து இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு ஒடிசா மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

SHARE