யேர்மனியில் நாளை ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு ஆரம்பம்: சிறீதரன் எம்.பி வாழ்த்து

327

 

“ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு” என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சிமாநாடும், செந்தமிழ்க்கலைமாலை நிகழ்வும்-2015 யேர்மனியில் நாளை நடைபெற உள்ளது.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்- ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் Wupper Halle Hunefeldstr.63b 42285 Wuppertal Germany எனுமிடத்தில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் அகிலத்தலைவருமான செந்தமிழ்க்காவலர் வி.எஸ்.துரைராஜா, இயக்க செயலாளர் நாயகம் துரைகணேசலிங்கம், மாநாட்டுக் குழுத்தலைவர் இ.இராஜசூரியர், மாநாட்டுக் குழுச் செயலாளர் கி.யேம்ஸ் அல்ஸ்ரன் ஆகியோர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறியத் தந்துள்ளனர்.

கனடாவைத் தலைமைப் பீடமாகக் கொண்டு இயங்கும் இவ்இயக்கம் பலநாடுகளில் கிளை பரப்பி பதிவு பெற்றுள்ளது.

உலகளாவிய மாநாடுகள் மூலம் இவ் இயக்கம் தமிழர்களின் கலை, பண்பாடுகளை ஊக்குவிப்பதுடன் தமிழ் மொழிக்கல்வி, தமிழர் வரலாறு, ஆவண சேமிப்பு தூயதமிழ், வழக்கு தமிழ்ச் செம்மொழி உருவாக்கம், உலகத் தமிழர்களிடையே ஒற்றுமை பேணல் முதலான விடயங்களில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.

இது எமது மக்களின் வாழ்வியலில் இனத்தின் எதிர்காலத்தில் எமது சந்ததிகளின் பயணத்தில் தன் சீரிய பார்வைகளை விரித்து அதற்கான பணித்திட்டங்களை உருவாக்கி விரிவாக்கி தொடர்ந்து செயற்படும் ஓர் அமைப்பாக விளங்குவதை எமது மக்கள் அறிவார்கள்.

இம்மாநாட்டில் ஈழத்தில் வாழும் தமிழ்மக்களின் அமைதியான வாழ்வு மொழி பண்பாடு புனர்வாழ்வு வாழ்வுரிமை போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

காலை 10.00மணிக்கு இயக்கத்தின் அனைத்தலகப் பேரவைக் கூட்டம் அகில துணைத்தலைவர் பண்பாட்டுக்காவலர் தமிழ்த்திரு.சுப்பிரமணியம் தியாகலிங்கம் (நெடுந்தீவு) தலைமையில் இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான மாண்புமிகு மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், வேலுசாமி ராதாகிருஸ்ணன் மற்றும்

தமிழகத்தில் இருந்து இந்திய கம்யூனிற் கட்சியின் தமிழ்மாநில பொதுச் செயலாளர் சி.மகேந்திரன் அவர்களும் மற்றும் உலகநாடுகளில் இருந்து உலகளாவிய பேராளர்களும் ஊடகவியலாளர்கள் மற்றும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க உலகளாவிய பேராளர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

நாதஸ்வர வித்துவான் மதுரகானமணி என் பாலமுரளி, தவில் ஞானச்சுடரொளி கே.பி செல்வநாயகம் குழுவினர் வழங்கும் மங்கள இசை,

ஐரோப்பிய புகழ்பெற்ற நடன ஆசிரியைகளின் மாணவர்களின் எழுச்சி நடனம், பரதமாலை சங்கீத கலாயோதி திவாகர் சிவநேசன் குழுவினர் வழங்கும் தமிழிசைகச்சேரி, யேர்மனியில் புகழ் பெற்ற யங்ஸ்ரார் இசைக்குழுவினரின் எழுச்சிக் கானங்கள் இன்னும்பல கலை நிகழ்வுகள் இடம் பெறும்.

இந்நிகழ்வில் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இலங்கை மற்றும் ஐரேப்பிய வானொலி தொலைக்காட்சி புகழ் மதுரக்குரலோன் என்.ரி.ஜெகன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

எனவே இம்மாநாடு சிறப்புற அதில்கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுநிற்கின்றோம். இவ்வாறு உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் வாழ்வுரிமை மகாநாடு தமிழினத்திற்கு பலம் சேர்க்கட்டும்!- சிறீதரன் பா.உ

எதிர்வரும் 10ம் நாள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தால் ஜேர்மன் மண்ணில் நடத்தப்படவிருக்கும் சிறப்பு ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாடு சிறப்புற யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழத்துச் செய்தியொன்றை விடுத்துள்ளார்

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை சிறப்பு மகாநாடு எதிர்வரும் 10ம் நாள் ஜேர்மனியில் நடைபெறுவதையிட்;டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆழப்படர்ந்த ஈழத்தமிழினத்தின் இன்றைய நிலையில் இத்தகையதொரு மகாநாடு புலம்பெயர் மக்களையும் தாயக மக்களையும் உள்ளத்தால் ஒன்றிணைத்து எமது இனத்தின் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான சிந்தனைகளை உருவாக்கும் என நினைக்கின்றேன்.

உலகத்தமிழ் பண்பாட்டு கழகத்தின் அகிலத் தலைவராக மதிப்பிற்குரிய துரைராசா அவர்கள் பொறுப்பேற்ற பின் நடத்தப்படுகின்ற இந்த மகாநாடு சிறப்பு மிக்கதாக அமைய என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் எமது மக்களின் வாழ்வியலில் இனத்தின் எதிர்காலத்தில் எமது சந்ததிகளின் பயணத்தில் தன் சீரிய பார்வைகளை விரித்து அதற்கென பணிகளை திட்டங்களை உருவாக்கி அதை விரிவாக்கி தொடர்ந்து இயங்கும் ஒரு அமைப்பாக விளங்குவதை எமது மக்கள் அறிவார்கள்.

இதன் செயலாளர் துரை கணேசலிங்கமும் இயக்கத்தின் தலைமை நிர்வாகமும் நாடுகளின் கிளை அமைப்புக்களும் உலக நிலைகளை ஆராய்ந்து நெகிழ்வுத் தன்மைகளுடன் எமது இனத்தின் இருப்பை காத்துக்கொள்ள பாடுபடுவது போற்றத்தக்கது.

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் எமது மக்களை பொறுத்தமட்டில் விளம்பரங்களால் அல்ல போருக்குப்பின் எமது நிலத்தில் வீழ்ந்த எமது மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்பும் பணிகளாலேயே அறியப்பட்டிருக்கின்றது.

இனம் மொழி பண்பாடு என்பவற்றின் காப்பரணாக இந்த இயக்கம் தொடர்ந்து பயணிப்பது நம்பிக்கை தருகின்றது. இன்று எமது ஈழத்தமிழினத்தின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் ஊடாக உலகின் சகல நாடுகளுக்கும் ஐ.நா மன்றால் அறியப்பட்டிருக்கின்றது.

எமது மக்களுக்கான நிரந்தரமான உரிமையுடன் கூடிய பூர்வீக மண்ணில் வாழும் நிலைக்கான ஆரம்ப புள்ளியொன்று சர்தேச நிலையில் இடப்பட்டிருக்கின்றது.

இதை உரிமைக்காக போராடுகின்ற இனம் எப்படி தன்னுடைய இராஜதந்திரம் இனப்பற்று ஒற்றுமை அர்ப்பணிப்பால் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதைத்தான் காலம் பார்த்து காத்துக் கிடக்கின்றது.

இந்த நிலையில் வாழ்வுரிமை மகா நாடுகள் அதன் நோக்கங்களும் அதன் பிரகடனங்களும் எமது இனத்திற்கு பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

சர்வதேச அரங்குகளில் நடத்தப்படுகின்ற எமது இனத்தின் செயற்பாடுகள் இந்த உலகத்தால் நிச்சயம் உன்னிப்பாக கவனிக்கப்படும்.அவை காத்திரமாக அமைந்தால் எமது இனத்தின் விடுதலைக்கான நியாயப்பாடு சர்வதேசத்தில் பலப்படுத்தப்படும்.

எனவே உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்த சிறப்பு வாழ்வுரிமை மகா நாடும் ஒரு பலத்தை சேர்க்கட்டும்.இதற்காக பாடுபடுகின்றவர்கள் வரலாற்றால் மதிக்கப்படுவார்கள்.

ஏதிலிகளாக நாடற்று அலையும் எமது இனத்தின் சோகம் எமது சந்ததிகளுக்கு இல்லாத வகையில் எமது நிலத்தில் நிமிர்ந்து வாழும் நாளுக்காய் இந்த வாழ்வுரிமை மகாநாடு வாசல்களை திறக்கும் வேகத்தை தரட்டும் என தெரிவித்துள்ளார்.

SHARE