இங்கிலாந்து அணித்தலைவர் குக் இரட்டை சதம் விளாசல்: சங்கக்காராவின் சாதனை முறியடிப்பு

331

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் குக் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 523 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இதில் 5 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த மாலிக் இரட்டை சதம் அடித்தார். அவர் 24 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 245 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதே போல் ஹபீஸ் 98 ஓட்டங்களும், சபீக் (107) சதமும் அடித்திருந்தனர். இங்கிலாந்து சார்பில், பென் ஸ்டோக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் சிறப்பாக விளையாடி வருகிறது.

நேற்றைய 3வது நாள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 290 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அணித்தலைவர் குக் (168), ஜோ ரூட் (3) களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் ஜோ ரூட் 85 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். தொடர்ந்து மறுமுனையில் அசத்திய குக் இரட்டை சதம் அடித்தார்.

இங்கிலாந்து அணி தற்போது முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 434 ஓட்டங்கள் எடுத்து 89 ஓட்டங்கள் மட்டுமே பின் தங்கி உள்ளது.

அணித்தலைவர் குக் 224 ஓட்டங்களுடனும், பெர்ஸ்டவ் 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

சங்கக்காராவை முந்திய குக்:-

குக் இரட்டை சதம் எடுத்ததன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்திருந்த மெக்கல்லம், சங்கக்காரா ஆகியோரை அவர் முந்தியுள்ளார்.

இந்தப் பட்டியலில் குக் 3வது இடத்தில் இருக்கிறார். டிவில்லியர்ஸ் (278*), கிரேம் ஸ்மித் (234) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

SHARE