நான் பயந்த ஒரே பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்: மனம் திறந்த ஷேவாக்

302

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சில் தான் தடுமாறியதாக ஓய்வு பெற்ற ஷேவாக் தெரிவித்துள்ளார்.

தனது அதிரடி ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த ஷேவாக் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “தனது முதல் டெஸ்ட் போட்டி, முதன்முறையாக டெஸ்டில் 300 ஓட்டங்கள் கடந்தது, உலகக்கிண்ணத்தை வென்றது,

இலங்கைக்கு எதிராக 200 ஓட்டங்கள் எடுத்தது, 281 ஓட்டங்கள் எடுத்த போது விவிஎஸ் லட்மண் எழுந்து நின்று கைதட்டியது ஆகிய நிகழ்வுகள் எனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், ”சச்சின், டிராவிட், கங்குலி, கும்ளே மற்றும் ஜாகீர் கான் போன்ற வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது தன்னுடைய அதிர்ஷ்டம்” என்று கூறினார்.

முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பற்றி கூறுகையில், ”அவர் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். முழு நம்பிக்கையும் வைத்திருந்தார்.

அதனால் எனக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதை விட்டுக் கொடுத்தார். உங்களுக்கு மிகுந்த நன்றி சவுரவ்” என்று கூறியுள்ளார்.

மேலும், பல பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கிய ஷேவாக், தான் சந்திக்க பயந்த ஒரே பந்துவீச்சாளர் இலங்கை அணியில் முரளிதரன் என்று கூறியுள்ளார்.

ஓய்விற்கு பிறகும் என்னுடைய வாழ்க்கை கிரிக்கெட்டுடனே தொடரும் என்று கூறியுள்ள ஷேவாக், இறுதியாக தன்னுடன் விளையாடிய அனைத்து சக வீரர்களுக்கும், அன்பு காட்டிய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.

SHARE