ரூ. 5 கோடி மோசடி செய்ததாக மகாத்மாவின் பேத்தி மீது தென்ஆப்பிரிக்காவில் வழக்கு

297

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி மீது தென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய பின்னர், தாய்நாடு திரும்பி வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அகிம்சை ஆயுதத்தின் மூலம் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பெருமைக்குரியவர் மகாத்மா. தற்போது அவரது உறவினர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகின்றனர். அந்தவகையில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஸ் லதா ராம்கோபின்(45). இவர் தென்னாப்பிரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகச் சேவை தொடர்பாக தொண்டு செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். சமீபத்தில் அங்கிருக்கும் பிரபல செல்வந்தர்கள் சிலரைச் சந்தித்த லதா, அங்குள்ள மருத்துவமனைகளில் உள்ள கட்டில்களில் படுக்கை வசதி செய்வதற்காக இந்தியாவில் இருந்து மூன்று கண்டெய்னர்களில் லினென் துணிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றிற்கு சுங்கவரி செலுத்த பண உதவி செய்யுமாறும் கேட்டுள்ளார். இதனை நம்பிய மஹராஜ் என்ற தொழிலதிபரும் ,வேறு ஒருவரும் பண உதவி செய்துள்ளனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு லதா அவர்களை ஏமாற்றியது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் தென்னாப்பிரிக்க நாட்டின் சிறப்பு படையான ‘ஹாக்ஸ்’ அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் லதா மீது திருட்டு, பித்தலாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இரண்டு தொழிலதிபர்களை ஏமாற்றி, லதா 830,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் இது 5 கோடியே 39 லட்ச ரூபாய் ஆகும். இது தொடர்பாக, லதா டர்பன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். லதாவின் தாயாரான எலா காந்தி, பல ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலராக தொண்டாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கருப்பின அடிமைகளுக்காக மகாத்மா காந்தி உருவாக்கிய போனிக்ஸ் சேரி எனப்படும் பகுதியில் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடடைய பல முயற்சிகளை எடுத்து, சாதனை புரிந்தமைக்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் நன்மதிப்பையும், பல விருதுகளையும் பெற்றவர் எலா காந்தி

SHARE