சென்னையில் 4வது ஒருநாள் ஆட்டம்: வாழ்வா..? சாவா..? போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் இந்தியா

257

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் நடக்கும் 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும்.

அதே சமயம் ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும்.

இதனால் இந்தப் போட்டி டோனி தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும்.

இரு அணிகளும் இந்தப் போட்டியில் வெற்றி பெற தீவிரமாக போராடும். இந்த மோதலினால் சேப்பாக்கம் மைதானம் களைகட்டவிருக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் வலுவானதாக விளங்கி வருகிறது.

அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டுமினிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் கடைசி 2 ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார். இது தென் ஆப்பிரிக்க அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. இதை இந்திய அணி தங்களுக்கு சாதகமாக்க முயற்சிக்கும்.

அதேசமயம் இந்திய அணியை பொறுத்த வரை துடுப்பாட்டத்தில் நடுவரிசை மோசமாக உள்ளது. நடுவரிசை சொதப்பலால் தான் 2 போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியது. பந்து வீச்சிலும் ஓட்டங்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமானது.

இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகும். இதில் தோல்வி அடைந்தால் இந்திய அணி முதல்முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை சொந்த மண்ணில் இழக்க நேரிடும்.

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 19 சர்வதேச ஒருநாள் போட்டிகள் அரங்கேறி இருக்கின்றன. இதில் 10 ஆட்டங்களில் இந்திய அணி 5 ஆட்டத்தில் வெற்றியும், 4 ஆட்டத்தில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

மேலும், தென் ஆப்பிரிக்கா–இந்தியா அணிகள் இதுவரை 74 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

இதில் தென் ஆப்பிரிக்க அணி 44 ஆட்டத்திலும், இந்திய அணி 27 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. நாளை 75வது முறையாக இரு அணிகளும் சந்திக்கின்றன.

SHARE