ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தை பார்க்கவில்லை.. ஷேவாக் அதிரடியை தான் பார்த்திருக்கிறேன்: டோனி வாழ்த்து

275

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஷேவாக்கிற்கு கிரிக்கெட் வீரர்களும், பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேற்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடிய ஷேவாக், சர்வதேச ஒருநாள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.

சச்சின்:-

ஷேவாக் பற்றி முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறுகையில், தனது அசாத்தியமான ஆட்டத்தால் ஷேவாக் முத்திரை பதித்தவர். அவர் எப்போதும் தனது உள்ளுணர்வின் படியே ஆடக் கூடியவர். அவர் மேலும் நம்மை மகிழ்விக்கும் விடயங்களில் ஈடுபடுவார் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

டோனி:-

இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், “நாங்கள் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தை பார்க்கவில்லை. ஆனால் நல்ல பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்த ஷேவாக்கின் அதிரடி ஆட்டத்தை பார்த்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரெய்னா:-

ரெய்னா கூறுகையில், ஷேவாக்குடன் விளையாடியது எனது அதிர்ஷ்டம் என்றும், அவருடன் விளையாடிய நாட்களை மறக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

ஜாகீர் கான்:-

சில தினங்களுக்கு முன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜாகீர் கான் கூறுகையில், ஷேவாக், எப்படிப்பட்ட பந்துவீச்சினையும் எதிர்கொள்ளக் கூடிய சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

யுவராஜ்:-

யுவராஜ் கூறுகையில், “தலைசிறந்த வீரர்களில் ஷேவாக்கும் ஒருவராக உள்ளார். அது மட்டுமல்லாது அவர் எனக்கு சிறந்த நண்பர்” என்று கூறியுள்ளார்.

பிரட் லீ:-

முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கூறுகையில், “உங்களுக்கு எதிராக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. சில சமயம் நான் உங்களை வீழ்த்தியிருக்கிறேன். ஆனால் எப்போதும் அது நடந்தது இல்லை. வாழ்த்துக்கள் ஷேவாக்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE